ரணில் தரப்பு தனியாக போட்டியிட்டாலும் இறுதியில் ராஜபக்ச அணியில் சரணடையும்!

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணியினருக்கு அளிக்கப்படும் வாக்குகளானவை இறுதியில் ராஜபக்சக்களின் வாக்கு வங்கிக்கே சென்றடையும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பெரும் இழுத்தடிப்புக்கு மத்தியில் இறுதி கட்டத்திலேயே சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிப்பதற்கு ரணில் தரப்பு நடவடிக்கை எடுத்தது.
இக்காலப்பகுதிக்குள் மொட்டு கட்சியினர் கீழ்மட்டங்களில் பிரச்சாரங்களை முடித்திருந்தனர். அதாவது ராஜபக்ச தரப்பு பாதிதூரம் ஓடிய பின்னரே, சஜித்துக்கு ஓட்டத்தையும், தேர்தல் ஆட்டத்தையும் ஆரம்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
திட்டமிட்ட அடிப்படையில் காலைவாரி, கழுத்தறுப்பு செய்யும் வகையிலேயே ரணிலும், அவரின் சகாக்களும் இறுதிவரை காலத்தைக் கடத்தினர். பிரச்சாரங்களின்போது கூட துரோகங்களே கட்டவிழ்த்துவிடப்பட்டன.
முன்கூட்டியே சஜித்தை வேட்பாளராக அறிவித்து, அவரின் வெற்றிக்காக ரணில் அணியும் உண்மையாக உழைத்திருந்தால் வெற்றி சாத்தியமாகியிருக்கும்.
பொறுப்பற்ற விதத்தில் வேண்டுமென்றே சில அறிவிப்புகளை விடுத்து, ராஜபக்சக்களுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பை வழங்கியதாலேயே முடிவுகள் மாறின.
இம்முறையும் சஜித்தை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும், புதிய கூட்டணியின்கீழ் போட்டியிடுவதற்கும் அனுமதி வழங்கிவிட்டு, இறுதி நேரத்தில் ரணில் குழு குத்துக்கரணம் அடித்தது.

சஜித் தலைமையிலான கூட்டணி பலமடைந்துவந்ததாலும், தேர்தலில் மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்கள் என்பதாலுமே ரணில் தரப்பை மஹிந்த அணி குத்தகைக்கு வாங்கி தற்போது சில நாடகங்கள் அரங்கேற்றி வருகின்றது.
ரணில் தரப்பு தனியாக போட்டியிட்டாலும் இறுதியில் ராஜபக்ச முகாமிலேயே அந்த அணி சரணடையும். எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணானவையாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனநாயகத்துக்கு எதிராகவும், மக்களை அடக்கி ஆளவும் முற்படும் இந்த அரசாங்கத்துக்கு முடிவு கட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *