பாலியல் துன்புறுத்தலால் 8 பெண்கள் தற்கொலை முயற்சி 6 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 2 சிறுமிகள் உள்பட 6 பழங்குடியின பெண்கள் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் பழங்குடியின கொலனிகள் உள்ள பகுதிகளில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விதுரா மற்றும் பாலோடு பொலிஸ் நிலைய எல்லைப்பகுதிகளில் 19 மலைவாழ் பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் பொலிஸார் அதிக அக்கறை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் போதைப் பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகமாக அரங்கேறுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விதுரா பகுதியில் 2 பழங்குடியின பெண்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சூடுபிடித்ததால், மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சமீபத்தில் நடந்த பெண் தற்கொலைகள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த துறை சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் கடந்த 2 மாதத்தில் விதுரா, பாலோடு மண்டலத்தில் 8 பழங்குடியின பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் 6 பேர் இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 8 பேரில் 2 சிறுமிகள் அடக்கம் என்றும், இவர்கள் அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பி உள்ளன. பழங்குடியின பெண்கள், போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும், அதை யாரும் கேட்பாரற்று பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் பெருத்த சமூக அவலம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக கண்டனம் எழுந்து உள்ளது.

இந்த விவகாரம் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *