ரோஹன விஜயவீர இயற்கையாக மரணமடைந்தாரா? படுகொலை செய்யப்பட்டாரா?

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் ரோஹண விஜயவீர இயற்கையாக மரணமடைந்தாரா? அல்லது பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டாரா என்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பாராளுமன்றத்தில் பதிலளிப்பார் என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.

ரோஹண விஜயவீர தொடர்பில் இம்மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாவொன்றை லலித் எல்லாவல எம்.பி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வினவியிருந்தார்.

1989.11.12 அன்று கைது செய்யப்பட்டதாக கூறும் ரோஹன விஜயவீரவின் மரணம், இயற்கையானதா? அல்லது படுகொலையா? என கேள்வி எழுப்பியதோடு, படுகொலை எனின், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வழக்கு தீர்ப்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார்.

மேலும் ரோஹண விஜயவீரவின் மரணம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், தலைவர் ஒருவர் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனரா? எனவும் வினவியிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு இருவாரங்களில் பதிலளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபைக்கு அன்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்து தெரிவித்த லலித் எல்லாவல எம்.பி, அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் இதற்கான பதில் நிச்சியமாகக்கிடைக்கும். நான் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போதும் இது தொடர்பில் பேசியிருக்கிறேன். ரோஹன விஜயவீரவை உண்மையில் படுகொலை செய்துள்ளனர் என்றார்.

எனினும், இதுதொடர்பில் அநுர குமார திஸாநாயக்க எடுத்த நடவடிக்கை எதுவும் இல்லை. பாராளுமன்றத்தில் கூட இதுதொடர்பில் அவர் வாய் திறந்ததில்லை. எனவே ரோஹண விஜயவீரவின் கொலை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? என்பதை அறியவே நான் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வினாவாக எழுப்பியுள்ளேன்.” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *