ஆணைக்குழு அமைக்கப்பட்டால் 14 அமைச்சர்கள் மீது முறைப்பாடு! – மஹிந்த அணி எச்சரிக்கை

“தற்போதைய அரசின் ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழு அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்பட்டால் இந்த அரசில் உள்ள அமைச்சர்கள் 14 பேருக்கு எதிராக நாம் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வோம்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விசாரணைக் குழுக்கள் திருத்தச் சட்டமூலம் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவானது எதிர்க்கட்சியினருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை மாத்திரம் விசாரணைகள் செய்து வழக்குத் தொடுக்கின்றது.

அரசில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்குத் தொடுக்கப்படவும் இல்லை. அந்த ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அடக்கும் பணியையே கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கச்சார்பானது

1995ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த ஆணைக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதனாலேயே 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசு, அந்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அரச தலைவருக்கு இருந்த அதிகாரத்தை அரசமைப்புப் பேரவைக்கு வழக்கப்பட்டன.

அவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பக்கச்சார்பாகச் செயற்பட முடியாது. தற்போது உள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்குச் சென்ற எமக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அவற்றை விசாரணைகளை மேற்கொண்டு வேகமாக ஆணைக்குழு வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனக்கு எதிராகவும் சம்பந்தமில்லாது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இறுதியில் அதை மீளப் பெற அந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

எதிர்க்கட்சிகளை
ஒடுக்கவே ஆணைக்குழு

எதிர்க்கட்சித் மாத்திரம் வழக்குத் தொடரும் ஆணைக்குழுவாக மாறியுள்ளது. இதுவரை அரசின் அமைச்சர்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?.

கடந்த காலங்களில் அரசில் இருந்த 10 அமைச்சர்களுக்கு எதிராக 121 பில்லியன் ரூபா மோசடி தொடர்பாக நாங்கள் ஆணைக்குழுவில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முறைப்பாடு செய்தோம்.

ஆனால், இதுவரை எந்த அமைச்சரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. குற்றப் புலனாய்வுத் துறையும் விசாரணை செய்யவில்லை.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி இந்த அரசு ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி நடந்தது. அதனால் நாட்டுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்றன. அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டுவரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சுயாதீன ஆணைக் குழு என்றால் அனைவரும் சமமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிக்கு எதிராக மட்டுமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் சுயாதீன என்ற வசனத்தை நீக்கிவிட்டு எதிர்க்கட்சிக்கான ஆணைக்குழு என்ற வசனத்தை இணைத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சியை ஒடுக்கும் ஆணைக்குழு என்று பெயரிட்டாலும் பரவாயில்லை. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் அவ்வாறானதே. அது சட்டவிரோதமானது. அது எதிர்க்கட்சிக்கு எதிரான குழுவே” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *