பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெளியானது!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன, இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானின் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரியந்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இஸ்லாத்தில் முஹம்மது நபியின் பெயரைக் கொண்ட சுவரொட்டியை இழிவுபடுத்தியதாக தொழிற்சாலை ஊழியர்களின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் கணேமுல்ல பொக்குண சந்தியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரியந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்றும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் பிரதமர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *