அவசரகாலச் சட்டம் என்றால் என்ன?

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமானது அவசர காலச் சட்டம் என குறிப்பிட்டுக் கூறப்படுகிறது .
இதனை விதிவிலக்கான அறிவுறுத்தல் , ஆபத்து அல்லது அனர்த்தம் காணப்படுகின்ற சந்தர்ப்பம் எனவும் கூற முடியும்.
இச் சந்தர்ப்பங்களில் ஆபத்தான நிலைமைகளைக் கையாளும் பொறுப்பும் சாதாரண சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படாத விசேட அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. இத்தகைய சந்தர்ப்பமானது தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்பவற்றை பேணும் பொருட்டு முடிவெடுக்கும் உரிமையினை ஜனாதிபதி கொண்டிருப்பதனைக் குறிக்கிறது.

அவசரகாலச் சட்டத்தினை பிரகடனப் படுத்துவதற்கான அதிகாரம் எங்கிருந்து வருகின்றது? யார் அதனை பிரகடனப்படுத்த இயலும் ?

பிரகடனமொன்றின் வாயிலாக அவசரகாலச் சட்ட நிலைமையினை அறிவிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. உறுப்புரை (155) இல் இப் பிரகடனமானது பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்பதுடன் பாராளுமன்றமானது இந்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டு இது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டு சட்டமாக்கப்படுகின்றது.
அவசரகாலச் சட்ட பிரகடனத்தினை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது.
மேலும் இவை அரசியலமைப்பினைத் தவிர்ந்த ஏனைய அனைத்து சட்டங்களையும் மிஞ்சி செயற்படும்.

அவசரகாலச் சட்டம் எவ்வளவு காலத்திற்கு வலுவிலிருக்கலாம்?

ஜனாதிபதி ஒரு மாத காலப்பகுதிக்கு வலுவிலிருக்கக்கூடிய வகையில் அவசரகால நிலைமையினைப் பிரகடனப்படுத்தலாம்.
இப் பிரகடனத்தினை பாராளுமன்றமானது 14 நாட்களுக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லாவிடின் அப் பிரகடனம் வலுவற்றதாகும். அவசரகால நிலைமையானது 30 நாட்களுக்கு ஒருமுறை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் மாத்திரம் நீடிக்கப்பட இயலும்.

இதனடிப்படையில் இலங்கைக்கு அவசர சட்டம் புதியதல்ல. இது தேவைக்கேற்ப அவ்வப்போது அமுல்படுத்தப்படுகிறது. அரசியல் கோட்பாடுகளின் படி அவசரகால நிலைச் சட்டம் என்பது ஜனநாயக நிர்வாகத்தின் ஒரு வடிவமாகும். இது அவசர மற்றும் ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதப் போரின்போது பல ஆண்டுகளாக அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. கோவிட் தொற்றுநோய் காரணமாக, பல நாடுகள் அவசரகாலச் சட்டத்தினை அமுல்படுத்தின. அந்த வகையில் இப்போது நம் நாடும் பேரழிவான நிலமையை முகம்கொடுத்துள்ளது. அதைச் சமாளிக்க அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதாகும். தற்போதைய சூழ்நிலையில், வர்த்தக ரீதியிலான கடத்தல் மற்றும் பதுக்கல் போன்ற குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை பொதுமக்களுக்கு ஆபத்தானதாகவும் மாறிவிட்டன. இவற்றினை களை பிடுங்கி எரிவதற்கு இச் சட்டம் இன்றியமையாததாகும்.

அவசரகாலச் சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் இடையே தொடர்பு இருக்கலாம். அதனால் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மீதும் குற்றம் சுமத்த முயன்றனர், ஆனால் அதில் பயனில்லை. பொது மக்கள் ஜனாதிபதி மீது வலுவான நம்பிக்கையும் மரியாதையும் கொண்டுள்ளனர். கோவிட் மூன்றாவது அலையின் உச்சத்தின் போது எதிர்க்கட்சிகள் 800க்கும் மேற்ப்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன. அதில் எதுவும் அடக்கப்படவில்லை. அடக்குமுறை இல்லாமலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நாட்டின் தலைவர்கள் மக்களின் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும், தேவையான இடங்களில் தமது சக்தியைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் சில தீங்கு விளைவிக்கும் விஷயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டங்கள் ஒரு புத்தகத்திலோ அல்லது அரசியலமைப்பிலோ அல்லது உட்பிரிவுகளாகவோ இருந்து பயனில்லை. அவை பொது நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். எனவேதான் பொது நலனுக்காக அவசரகாலச் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதே அதன் இறுதி இலக்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *