சிறையில் சொகுசு வாழ்க்கை 2 கோடி ரூபா லஞ்சம் கொடுத்த சசிகலா!

சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்புடைய பெங்களூரு சிறை அதிகாரிகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகா அரசுக்கு இம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற  சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது டிஜிபி, எஸ்பி.க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்று கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரித்த தனிக்குழு, லஞ்சம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்தது. பின்னர், ஊழல் தடுப்பு படைக்கு  வழக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இதன் அதிகாரிகள் விசாரணையை மந்தமாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சுட்டிக்காட்டி சென்னையை சேர்ந்த கீதா என்ற சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் முதற்கட்ட விசாரணையை நடத்தி, ஆகஸ்ட் 25க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி, ஊழல் தடுப்பு படை அதிகாரிகளும் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி  செப்டம்பர் 7க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று ஊழல் தடுப்புப் படையின் வக்கீலிடம் நீதிபதி கேட்டார். அதற்கு பதில் அளித்த வக்கீல், ‘முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணா, எஸ்பி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள், அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்,’ என்று கூறினார்.

இதை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, ‘வழக்கு பதிவு செய்து இவ்வளவு  நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இனி எந்த அலட்சியமும் காட்டக்கூடாது. 30 நாட்களுக்குள் முறையான அனுமதி பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால், அனுமதி கிடைக்கவில்லை என்றாலோ, கர்நாடக தலைமை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நேரிடும்,’ என்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *