வெள்ளக்காடாய் மாறிய நியூ யோர்க் அனர்த்தத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு!

இடா சூறாவளி எதிரொலியாக கொட்டிய பலத்த மழையால் நியூயார்க் நகரமே வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களை தாக்கிய இடா புயலால் வரலாறு காணாத மழை கொட்டியது. மேரிலேன், நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்தும் நதிகளாக மாறிவிட்டன. நியூயார்க்கில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் மூழ்கிவிட்டன.

இதுகுறித்து நியூயார்க் பெண்மணி ஒருவர் தெரிவித்ததாவது, திடீரென வெள்ளம் வீட்டை சூழ்ந்துவிட்டது. நான் வெளிக்கதவினை திறக்க முயன்றேன். என்னால் திறக்க முடியவில்லை. வெள்ளத்தால் கதவு வெளிப்புறம் அழுத்தமாக மூடிக்கொண்டதால் வெளியேற முடியவில்லை. உடனே நண்பர்களை தொடர்ந்து கொண்டு எங்களை காப்பாற்றுமாறு வேண்டினேன் என்று குறிப்பிட்டார். மற்றொருவர் கூறியதாவது, பிரான்க்ஸ் நதிக்கரையோரம் நான் வசிக்கின்றேன். இதனால் மிக சுலபமாக வெள்ளம் வீட்டுக்குள் வந்துவிட்டது. நதிகளின் வழித்தடத்தில் நாம் குறுக்கிடும் போது இதுபோன்ற பேரிடர்கள் தான் நடைபெறும்.

கோடி கணக்கில் செலவழித்து வழித்தடத்தை மாற்ற முற்பட்டாலும், இயற்கை தன் பாணியில் அதற்கு பதில் சொல்லிவிடும் என்று தெரிவித்தார். விடியவிடிய கொட்டித்தீர்த்த மழையால் 5 மாகாணங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நியூ ஜெர்சியில் சுழன்று அடித்த சூறாவளி நகரத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *