ஒன்றாகப் பிறந்து ஒன்றாக பட்டம் பெற்ற 4 உடன்பிறப்புகள்!

பிரித்தானியாவின் ஆக்ஸ்ஃபோர்டு (Oxford) நகரிலுள்ள புரூக்ஸ் (Brookes) பல்கலைக்கழகத்திலிருந்து 4 உடன்பிறப்புகள் ஒன்றாகப் பட்டம் பெற்றுள்ளனர்.

அதில் என்ன அதிசயமென்றால், அவர்கள் நால்வரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். அந்தப் பல்கலைக்கழகத்தில் அவ்வாறு 4 சகோதரர்கள் சேர்ந்து கல்வி பயின்றது அதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

துபாயில் பிறந்த அந்த நால்வருக்கும் தற்போது 20 வயது. மூன்று ஆண் மற்றும் ஒரு பெண். பெண்ணின் பெயர் அயா (Ayah), மற்ற மூன்று சகோதரர்களின் பெயர் அப்தெல்ரஹீம் (Abdelrahim), ஒசாமா (Osama) மற்றும் அஹ்மத் ஷபான் (Ahmad Shaaban).

2018-ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி பயில நால்வரும் துபாயிலிருந்து சென்றனர். உட்புறக் கட்டிடக்கலை, கணக்கியல்-நிதி, சட்டம், வர்த்தகம்-மேலாண்மை என நால்வரும் 4 விதமான துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொண்டனர்.

உடன்பிறப்புகளுடன் சேர்ந்திருந்ததால் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்வது மிகச் சுலபமாக இருந்தது என்றார் ஒருவர்.

மற்றொரு சகோதரர், உடன்பிறப்புகள் உடன் இருந்தாலும், துபாயில் வீட்டைப் பற்றியே சிந்தனைகள் இருந்ததாகச் சொன்னார். பல்கலைக்கழகப் படிப்பின் முதலாம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட அவர்களது சகோதரி, மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார்.

சகோதரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவால் அதிலிருந்து மீண்டு வந்ததாக அவர் கூறியயுள்ளார். நால்வரும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதில், அவர்களைப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொண்ட மாணவர்கள்-சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் மகிழ்ச்சி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *