டிசம்பர் 2022 வரை வீட்டிலிருந்து வேலை!

2022 டிசம்பர் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று பரவலால் நாடு முழுவதும் பல மாதங்களாக அவ்வப்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐடி நிறுவனங்கள், ஐடி ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிந்தவாறு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது அலையில் தோற்று பரவல் குறைந்ததையடுத்து மீண்டும்  அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் நடைமுறையை மெல்ல மெல்ல பல்வேறு நிறுவனங்களும் தொடங்கி வருகின்றன. 

இந்நிலையில் கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தே பணி புரியும் வசதியை ஐடி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு விடுத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அவர் கூறுகையில்  பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்ட் சாலையில் அடுத்த ஓராண்டுக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது.இந்த பகுதியில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், ஐடி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால்  கடும் போக்குவரத்து நெரிசல் நாள் முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப‌ப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்வதாக 50 சதவீத நிறுவனங்கள் அரசுக்கு பதில் அனுப்பியுள்ளன என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *