அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் யூதர்கள் ஏன் ஆட்டை பலியிடுகின்றனர்?

அல்-அக்ஸா மசூதியின் கோல்டன் டோம் தற்போது இருக்கும் அதே இடத்தில் மூன்றாவது கோவிலைக் கட்ட பல யூத குழுக்கள் விரும்புகின்றன.

இங்கே பலியிடல் நடத்தப்படவேண்டும் என்று சில அடிப்படைவாத யூதர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், அல்-அக்ஸா மசூதியின் வளாகம், முஸ்லிம்களின் மிகவும் புனிதமான இடங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசி நபியான ஹஸ்ரத் முகமது இங்கிருந்து ஜன்னத்திற்கு (சொர்க்கம்) சென்றார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். யூதர்கள் இங்கு வர அனுமதிக்கப்பட்டாலும், அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது ஜெருசலேமின் இந்தப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்தப் போருக்குப் பிறகு, அல்-அக்ஸா மசூதியைப் பாதுகாக்கும் ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. யூதர்கள் இந்த மசூதி வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வழிபட அனுமதி இல்லை என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

மசூதி வளாகத்திற்குள் ஆயுதமேந்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் இருப்பு மற்றும் வழிபாட்டாளர்கள் நடமாட்டத்திற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பல முஸ்லிம் அமைப்புகளும் மசூதியைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துள்ளன.

யூத அடிப்படைவாத குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும், பாஸ்கா (Passover) விழா தொடங்குவதற்கு முந்தைய நாள் மாலை இந்த பலியிடலை நடத்தும் பொருட்டு தயாராகின்றன. அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு கடவுளின் கட்டளையை நோக்கி நகரும் நினைவாக இஸ்ரேலியர்கள் இந்த விழாவை சுமார் ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள்.

இந்த யூதப் பண்டிகை வரும்போதெல்லாம், பலியிடும் தேதிக்கு முன்னதாகவே இஸ்ரேலிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில முக்கியமானவர்களை கைது செய்கிறார்கள், மசூதி வளாகத்தில் இந்த சடங்கை நடத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.

இந்த ஆண்டு பாஸ்கா விழா கடந்த புதன்கிழமை அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வியாழன் அன்று முடிவடைகிறது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இந்தப்பண்டிகை நடப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.

அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் ஆடு பலியிடும் முயற்சியின் பின்னணியில் குறிப்பாக ஒரு யூத அடிப்படைவாதக் குழு உள்ளது. இந்த அமைப்பின் பெயர் ‘ரிட்டர்ன் டு தி மவுண்ட்’.

கடந்த ஆண்டு இந்த அமைப்பின் தலைவரான ரஃபேல் மோரிஸிடம் பிபிசி பேசியது. ரஃபேல் மோரிஸ் ஒரு முஸ்லிம் போல் மாறுவேடமிட்டு அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் வழிபட முயன்றார்.

மோரிஸ் தன்னை யூத மதத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்கிறார். “பைபிளில் கடவுள் வாக்குறுதியளித்தபடி, டெம்பிள் மவுண்ட் யூதர்களுக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன். டெம்பிள் மவுண்டை மீண்டும் வெற்றிகொள்வதே எங்கள் இலக்கு” என்று அவர் கூறினார்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டதான சந்தேகத்தின் பேரில் ரஃபேல் மோரிஸை இஸ்ரேல் காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

அல்-அக்ஸா மசூதியில் யாராவது ஆட்டை பலியிடுவதில் வெற்றிபெற்றாலோ, அவ்வாறு செய்ய முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டாலோ அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரிட்டர்ன் டு தி மவுண்ட் அமைப்பு அறிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *