தற்கொலை குண்டுதாரியாக மாறிய 14 வயது ஆப்கான் சிறுவன்!

தாலிபான்களின் கொடூர திட்டத்தில் இருந்து தப்பி, பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள 14 வயது சிறுவன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மரண பயத்தில் உள்ளான்.

தமது புகலிடக்கோரிக்கை இன்னும் பிரித்தானிய நிர்வாகத்தால் ஏற்கப்படாத நிலையில், தாம் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்றே  கண்கலங்கியுள்ளான்.

சஜித் என்ற அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானில் பள்ளிப்படிப்பை தொடர்ந்த வேளையில், ஒருமுறை பள்ளிக்கு வந்த தாலிபான்கள், மிகவும் புத்திசாலிகளான மாணவர்கள் குழு ஒன்றை தங்களின் பயிற்சி கூடத்திற்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அந்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் தாங்கள் செய்து கொள்வோம் என கூறியிருந்த தாலிபான்களின் உண்மை முகம் சில நாட்களில் அம்பலமாகியுள்ளது.

13 வயதேயான சஜித் உட்பட அழைத்து செல்லப்பட்ட மாணவர்களை தற்கொலை வெடிகுண்டுதாரிகளாக பயிற்சி அளித்துள்ளனர் தாலிபான்கள். இந்த பயிற்சியில் இருந்து தப்பிக்க முயன்றால் மொத்த குடும்பத்தையும் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

ஆனால், அந்த மிரட்டலுக்கு அஞ்சாத சஜித் தாலிபான்களிடம் இருந்து தப்பியதுடன், தந்தையின் சமயோசித முடிவால் 14 வயதில் சஜித் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புகுந்துள்ளான்.

தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் பெற்றோரை தேடிய சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் கடந்தும் தமது புகலிடக்கோரிக்கை இதுவரை பிரித்தானியா நிர்வாகத்தால் ஏற்கப்படாததால், தாம் மீண்டும் தாலிபான்களின் கைகளில் ஒப்படைக்கப்படலாம் என சஜித் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தமக்கு குடும்பம் என சொல்லிக்கொள்ள எவரும் இல்லை என கூறியும், இதுவரை பிரித்தானிய நிர்வாகம் தமது கோரிக்கை மனுவை ஏற்கவில்லை என்றே சஜித் தெரிவித்துள்ளார்.

நீண்ட 10 ஆண்டுகள் கடந்தும், தமது புகலிடக்கோரிக்கை ஏற்கப்படவில்லை எனவும், தற்போது தெற்கு லண்டனில் வசித்து வரும் சஜித், உரிய வேலைக்கும் செல்ல முடியாமல் அவஸ்தைப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் தாம் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற நிலையில், தாம் கண்டிப்பாக கொல்லப்படலாம் என்றே சஜித் கவலை தெரிவித்துள்ளார்.

புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு, நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரை தாலிபான்கள் தேடிச் சென்று கொன்ற சம்பவமும் தாம் கேள்விப்பட்டதாக கூறும் சஜித், இச்சம்பவம் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *