இந்தியாவில் உரிமை கோரப்படாத 50 ஆயிரம் கோடி ரூபா பணம்!

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மக்கள் சேமிப்பு செய்கின்றனர். பல்வேறு திட்டங்களில் செய்யப்படும் இந்தத் தொகை, முதிர்வு காலம் வந்த பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளரோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ உரிமை கோராமல் விடப்படுகின்றன.

டெபாசிட் செய்தவரின் திடீர் மரணம், குடும்ப வாரிசுகளுக்கு இடையே ஏற்படும் மோதல் அல்லது திடீர் மரணங்களால் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணம் இருப்பதே குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருப்பது,

டெபாசிட் தவணையை பாதியில் கைவிடுவது உட்பட பல்வேறு காரணங்களால் இத்தொகைக்கு உரிமை கோரப்படுவது இல்லை.

ஒரு கட்டத்துக்கு மேல், இவற்றை ‘உரிமை கோரப்படாத பணம்’ என்று அறிவித்து ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு உரிமை கோரப்படாத நிதி ரூ.50,000 கோடியை நெருங்கி உள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் நேற்று, கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை தனிப் பொறுப்பு அமைச்சர் பகவத் காரத் அளித்த பதிலில்,

“கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் உள்ள அனைத்து வர்த்தக வங்கிகளில், சுமார் 8.1 கோடி கணக்குகளில் உரிமை கோரப்படாத பணம் ரூ.24 ஆயிரத்து 356 கோடி உள்ளது.

இது, பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொரு கணக்கிலும் சராசரியாக ரூ.3,030 கோடியாகவும், எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.2,710 கோடியாகவும் உள்ளன. தனியார் வங்கிகள் ரூ.3,340 கோடி உள்ளது.

தனியார் வங்கிகளில் 6.6 லட்சம் கணக்குகள் உரிமை கோரப்படாமல் உள்ளன. 2020-ம் ஆண்டில் மட்டும் வங்கிக் கணக்குகளில், உரிமை கோரப்படாத ரூ.5,997 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

மொத்தமாக வங்கிகள் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத பணம் ரூ.50 ஆயிரம் கோடியை நெருங்கி உள்ளது.

உரிமை கோரப்படாத கணக்குகளின் உரிமையாளர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *