கொரோனா பாதிப்பினால் மக்கள்தொகை கூடுமா?

‘நம்ம காலத்துல கொரோனா மாதிரி ஏதாவது உண்டா’ என்று 2000 கிட்ஸ் பார்த்து முந்தைய தலைமுறையினர் புலம்புவது போல, இணைய வெளியில் மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பணியிழந்து, பொருளாதார வசதிகளை மீட்டெடுக்க முடியாமல் ஒருபுறம் மக்கள் தவித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தொடர் விடுமுறை போலான மனநிலையில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர் சிலர்.

கொரோனா கால ஊரடங்கினால் பல வீடுகளில் திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டாலும், கிடைத்த வசதி வாய்ப்புகளைக் கொண்டு புதுமணத் தம்பதிகளானவர்கள் எண்ணிக்கையும் கணிசம்.

ஜாலியாக ஊர் சுற்ற முடியாவிட்டாலும், எந்நேரமும் இணை பிரியாமல் இருக்கும் வாய்ப்பை இந்த ஜோடிகளுக்கு தந்திருக்கிறது இந்தக் காலகட்டம்.

இதுவே, ‘கட்டில்லயே குடும்பம் நடத்துறாங்க போல’ என்று அக்கம்பக்கத்தினர் சிலர் கிண்டலடிக்கும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

சரி, இதனால் மகப்பேறு அடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா? புதுமணத் தம்பதிகள் என்றில்லாமல், தாம்பத்தியத்தில் அந்நியோன்யத்தை அதிகரித்து குழந்தைப்பேறு அதிகளவில் நிகழ கோவிட்-19 காரணமாகியிருக்கிறதா?

உலக மக்கள்தொகை தினமான இன்று இதைப் பற்றி சிந்திப்பது அவசியமாகிறது.

உலக மக்கள்தொகை தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று ‘உலக மக்கள்தொகை தினம்’ கொண்டாடப்படுகிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற தகவல் நமக்குப் புதிதல்ல. இதற்கடுத்த இடங்களில் அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில் நாடுகள் இருக்கின்றன.

1987ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியைத் தாண்டியபோது, மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினத்தை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு (WHO).

1989 முதல் கொண்டாடப்படும் இந்நாளில், உலக மக்கள்தொகையால் சுற்றுச்சூழலும் மனித முன்னேற்றமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

உணவு, நீர், சூழல் சீர்கெடுதல், சுகாதார பாதிப்புகள், போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை, வேலையின்மை, பல விஷயங்களில் முன்னேற்றம் தடைபடுதல் போன்றவற்றுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக உள்ளது.

தற்போது 800 கோடியை நெருங்கிவரும் மக்கள்தொகை, 2050இல் 970 கோடியாகவும் 2100இல் 1090 கோடியாகவும் அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்திருக்கும் ஆயுள்!

மருத்துவ உலகில் நிகழ்ந்துவரும் கண்டுபிடிப்புகளும், பல்வேறு நோய்த் தீர்வுகளும் மனித ஆயுளில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன.

1990களில் 64.6 ஆண்டுகளாக இருந்த ஆயுட்காலம், 2019இல் 72.6 ஆண்டுகளாகியுள்ளது. 1970களில் ஒரு பெண் சராசரியாக 4.5 குழந்தைகள் பெற்றெடுப்பதாகக் கணக்கிடப்பட்டது; அதுவே, 2015இல் ஒரு பெண் 2.5 குழந்தைகளை சராசரியாகப் பெற்றெடுப்பதாகக் காட்டியது.

மனிதர்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கும் நிலையில், குழந்தைகள் பெறும் விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், இவ்விகிதம் உலகம் முழுவதும் சமநிலையில் இல்லை என்பது தனிக்கதை.

மக்கள்தொகை அதிகரிப்பை போலவே, நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன.

வரும் 2050ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 66 சதவிகிதம் பேர் நகரங்களில் வசிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.

மாறிவரும் மனநிலையும், வாழ்க்கை முறைகளும், பொருளாதாரம் மற்றும் நிலையான வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளும் மக்கள்தொகை பெருக்கத்தில் பெருமாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன.

கருத்தடை சாதனங்களும், சிறு குடும்பத்தை விரும்பும் போக்கும் கணிசமான முன்னேற்றத்தை இவ்விஷயத்தில் தந்திருக்கின்றன.

அதேநேரத்தில், மகப்பேறின்மைக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஆண், பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது கவலைக்குரிய விஷயம்.

மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு!

ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய அவசியம் குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களில் தாய் தந்தையுடன் மூன்று குழந்தைகள், அதன்பின் இரண்டு குழந்தைகள் இருப்பதைக் காணலாம். இப்போது, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே பொதுவான சித்திரமாக மக்கள் மத்தியில் படிந்துள்ளது.

மக்கள்தொகை அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வு பெருமளவு இருந்தாலும் கூட, இன்னும் இந்தியாவின் சில பகுதிகளில் அது பற்றிய சிந்தனையில்லாமல் குறைவாக இருப்பது கவலைக்குரியது.

குறைந்தபட்சம், அதிக குழந்தைகளின் பெற்றெடுக்கும் தாயின் உடல்நலம் குறித்த அக்கறையாவது பெருகினால் மட்டுமே இதில் நல்லதொரு தீர்வை எட்ட முடியும்.

எதிர்காலத்தில் குழந்தைகள் இது பற்றிய விழிப்புணர்வை முழுமையாகப் பெற, பாடத்திட்டத்தில் அது பற்றிய கருத்துகளின் செறிவை மேலும் அதிகப்படுத்த வேண்டும். கருத்தரங்குகள், ஊடகங்களில் அது பற்றிய விழிப்புணர்வு பரவலை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாவும் மக்கள்தொகையும்!

கடந்த ஆண்டு மார்ச் 11 அன்று, கொரோனாவை சர்வதேச நோய்த்தொற்று என்று அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். அப்போது முதல் அதனைச் சுற்றியே சுழன்று வருகிறது உலகம்.

கொரோனாவினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடப்பது, மாணவ மாணவியரைப் பொறுத்தவரை விடுமுறை நாட்களில் இருக்கும் உணர்வையே ஏற்படுத்தியிருக்கிறது.

அக்குழந்தைகளைப் பார்த்து நடுத்தர வயதினர் பெருமூச்சு விடுவதும் கிண்டலடிப்பதும் சகஜமாகிவிட்டது.

அதேபோல, 2020 மார்ச்சுக்கு முன்னதாக மற்றும் அதன்பின்னாக திருமணம் செய்த ஜோடிகள் பற்றிய கேலி, கிண்டல்களும் அதிகமாக உலா வருகின்றன. அதாகப்பட்டது, எந்நேரமும் சதா ‘அதே’ சிந்தனையில் தம்பதிகள் மூழ்கியிருப்பதாகக் கருதுவது இதன் சாராம்சம்.

உண்மையில், கொரொனாவினால் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறதா? இதற்கான பதிலைத் தேடும்போது, பொதுவெளியில் இருக்கும் மனநிலைக்கு எதிரான முடிவுகளே அதிகம் தென்படுகின்றன.

கோவிட்-19 பாதிப்பினால் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம், கொரோனா காலகட்டத்தில் குழந்தைப்பேறு அடைவதைப் பல பெண்கள் விரும்பவில்லை என்பதுதான்.

இதனால் பிரசவத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற பயம் ஒருபுறம் இருக்க, நோய்த்தொற்று சூழலில் குழந்தைகளை வளர்க்க விரும்பாதது மற்றுமொரு காரணமாக உள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இதேபோல, கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு வரை இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விஷயத்தில், உலகம் முழுக்க ஒரேமாதிரியான மனநிலை இருக்குமென்பதில் பெரிய வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், இந்தியாவிலும் கூட பல மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதற்கான முக்கியமான காரணமாக வேலை வாய்ப்பின்மை விளங்குகிறது.

கொரோனா நோய்த்தொற்றினால் பலர் வேலையிழந்து, பொருளாதார வசதிகளற்று தவித்து வருகின்றனர். உணவு, உடை, உறைவிடம் என்று அடிப்படைத் தேவைகளே கேள்விக்கு உள்ளான நிலையில், நான்காவதாக உள்ள இனப்பெருக்கம் குறித்த சிந்தனை தானாகக் குறையும் என்பதே யதார்த்தம்.

பொருளாதார பாதிப்புகளால் கணவன் மனைவிக்கு இடையே ஒரு திரை விழுவதையும், செக்ஸ் நோக்கிய உந்துதல் குறைவதையும், உலகின் எந்த பகுதிக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்தியாவிலும் அப்படியே!

இது குறித்த அதிகாரப்பூர்வமான தரவுகள் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படாவிட்டாலும் கூட, கடந்த 15 மாதங்களாக மகப்பேறு மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டிருப்பதைக் கண்கூடாக உணரலாம்.

மக்கள்தொகை வெடிப்பு நிகழுமா?

1918-19இல் ஐரோப்பாவில் ‘ஸ்பானிஷ் ப்ளூ’ கொத்துகொத்தாக மக்களின் உயிரைப் பறித்தது. இவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக இருந்தனர்.

இக்காலகட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததைப் போலவே, பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. இதற்கு தடுப்பு மருந்துகளும் சிகிச்சை முறைகளும் பெருகிய பின்னர், இளம் வயதினர் பலர் அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இதன் பலனாக, அடுத்த சில ஆண்டுகளில் மக்கள்தொகை விகிதம் சர்ரென்று மேலேறத் தொடங்கியது.

உலகின் வெவ்வேறு பகுதிகள் ஏதேனும் ஒரு நோய்பரவலுக்கு பெருமளவு மக்கள் பலியான நிலையில், அதன் தொடர்ச்சியாக மக்கள்தொகை அதிகரிப்பது வழக்கமான விஷயம்.

ஆனால், கொரோனாவை பொறுத்தவரை முதிய வயதினரே அதிகளவில் மரணத்தை எதிர்கொள்கின்றனர். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே அதன் பாதிப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

இதனால், கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் குறைந்தபிறகும் கூட மக்கள்தொகை பெருக்கத்தில் வெடிப்பு ஏதும் நிகழ வாய்ப்பில்லை என்றே சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

மக்கள்தொகை அதிகரிப்புக்கு கொரோனாவோ, அதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சூழலோ காரணமாக விளங்கவில்லை என்பதே இதன் பின்னிருக்கும் உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *