திருப்பதி ஏழுமலையானுக்கே பணம் சிக்கலில்!

உலக அளவில் பெரும் வருமானம் வரக்கூடிய கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பக்தர்கள் ஏராளமாகத் திரளும் கோவிலிலேயே இப்போது ஒரு சிக்கல்.

அதுவும் கோவிலுக்கு வந்த உண்டியல் வருமானம் தொடர்பான சிக்கல். 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி உருவான சிக்கலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

அப்போது பண மதிப்பு நீக்கத்தினால் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு மதிப்பிழந்து போனது. அப்போது ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணம் மட்டும் 49.70 கோடி.

காணிக்கையாகச் செலுத்தப்பட்ட அந்தப் பணத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டு புதிய மதிப்புள்ள நோட்டாக மாற்றித்தருமாறு திருப்பதி தேவஸ்தானக்குழுவினர் பல கடிதங்களை எழுதியும் பதில் இல்லை. மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் பலனில்லை.

ரிசர்வ் வங்கியோ ஏழுமலையான் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி பணத்தை மாற்றிக் கொடுத்தால், அடுத்தடுத்துப் பலரும் இதே மாதிரி மாற்றித்தரக் கோரினால் என்ன செய்வது என்று பின்வாங்கி விட்டது.

குழம்பி நிற்கிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்.

பண மதிப்பிழப்புக்குப் பிறகு இந்தியாவில் வங்கியில் தங்கள் பணத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டு நின்றதைப் பலரும் மறந்துவிட முடியாது.

ஏழுமலையானும் இத்தனை ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *