கொரோனா ஆலோசனை மையமாக மாறிய கோவை மசூதி!

கோயம்புத்தூர்  கரும்புக்கடை பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜூதுல் ஹூதா மசூதியில்  கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை வசதிகள் பற்றிய தகவல்களை வழங்குவதுடன் மனநல ஆலோசனை மையமும் செயல்படத் தொடங்கியுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

நாற்பது ஆண்டுகள் பழைமையான இந்த மசூதி தற்போது கொரோனா நோயாளிகளுக்கான ஆலோசனைகள் வழங்கும் உதவிமையமாக மாற்றப்பட்டுள்ளது.  கொரோனா இரண்டாவது அலையின் ஊரடங்குக் காலத்தில் தொழுகை நடக்காத காரணத்தால், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் மற்றும் இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை சேர்ந்து இம்முடிவை எடுத்தனர்.
ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் எம்எஸ். சபீர் அலி, “நாங்கள் இரு சேவைகளை வழங்கிவருகிறோம். எந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்ற தகவலை அளிப்பதுடன், கொரோனா பாதிப்படைந்தவர்கள் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதற்கு வழிகாட்டுகிறோம்” என்று சொல்கிறார்.

கோவை மாவட்டத்தில் எந்த மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளன என்பது பற்றிய தகவல்கள் அரசு இணையதளத்தில் கொடுக்கப்படுகின்றன.
ஆனால் அவற்றைப் பயன்படுத்த மக்களுக்குத் தெரியவில்லை. அதுபோன்ற தகவல்களை தேடி வரும் நோயாளிகளுக்குச் சொல்கிறார்கள். மேலும் இங்கு செயல்படும் மருத்துவ ஆலோசனை மையத்தில் 75 மருத்துவர்கள் மக்களுக்குக் கட்டணமில்லாத இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது மன அழுத்தம், குழப்பம், பயம், கோபம் போன்றவற்றால் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். முதலில் அவர்களுக்கு மனநல ஆலோசனையும் ஆறுதலும் தேவைப்படுகிறது. அந்த நற்பணியைத்தான் கோவை  கரும்புக்கடை மசூதி சத்தமில்லாமல் செய்துவருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *