நாம் அனைவரும் சரியாக இருந்தால் சட்டமே தேவையில்லை!

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

சட்ட மூலாதாரங்கள்!

ஒரு விடயத்தை ஏற்க முன்பு அது எங்கிருந்து பெறப்பட்டது என்று அறிவதுதான் ஒரு சிறந்த துப்பறிவாக இருக்கும். அந்தவகையிலே சட்டங்களை ஏற்க முன்னர் சட்டங்கள் எங்கிருந்து பெறப்பட்டன?, எவ்வாறு பெறப்பட்டன?, எதற்காகப் பெறப்பட்டன? போன்ற கேள்விகளுக்கு விடைகள் போதுமான அறிவு இருத்தல் அவசியமாகும்.

சட்டம் என்பது சடுதியாகவோ, ஒரே நாளிலோ அல்லது ஒரே நபரின் அறிவினாலோ உருவாக்கப்பட்டது இல்லை. அதன் விருத்தியானது கட்டம் கட்டமாக – காலம் காலமாக நீண்ட பயணத்தைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறான விருத்திக்குப் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

நாட்டுக்குள்ளே நின்றுவிடாது சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் சட்டத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த காரணிகளையும், சட்டம் உருவாகத் துணை நின்ற காரணிகளையும் நோக்குவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

வழக்காறுகள்

வழக்காறு என்ற சொல் புதிதாக இருந்தாலும் வழக்காறு என்பது காலம்காலமாக மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக ஒழுங்கு முறையாகும்.

எளிமையான பொருளில் கூறுவோமாயின் காலங்காலமாக எமது பாட்டன், பூட்டனால் பின்பற்றப்பட்டு வந்த பழமையான ஆனால் இன்று வரைக்கும் தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ள முறைகள் ஆகும். சமூக ஒழுங்கு முறைகள் என்பது அன்றே தோன்றியவை அல்ல. அவை படிப்படியாக விருத்தியடைந்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீண்டகால நடைமுறைக்குப் பின்னர் மாற்றமடைகின்றன.

புராதன காலத்தில் மரபுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் மதங்கள் என்பன சமூக நடத்தையில் அதிகமாகவே செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றன.

இவைகளுக்கு அப்பால் சில அவசியமான நடைமுறைகளையும் பின்பற்றி இருக்கின்றன. இவையனைத்தும் கால ஓட்டங்களின் பின்னர் வழக்குகளாக மாற்றமடைந்தன. இன்று அந்த வழக்குகளில் இருந்து சட்டங்களை உருவாக்கும் அளவுக்கு வழக்காறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் எல்லா நாடுகளிலும் இவை சட்டங்களாக உருப்பெற்றன எனலாம். எழுதப்படாத யாப்புகளைக் கொண்ட இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பொறுத்த வரைக்கும் வழக்காறுகள் சட்டங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

வழக்காறுகள் என்பவை உடன்படிக்கைகளை போல் எழுதப்பட்டவை அல்ல. பன்னெடுங்காலமாக நாடுகளால் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் அவை பலராலும் பின்பற்றப்படுகின்றன. அதேவேளை, சர்வதேச வரலாற்று நடைமுறை மூலம் உருவாக்கப்பட்டு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு சர்வதேச சட்ட விதிகளாகின்றன.

மதம்

மதம் என்பது அன்றிலிருந்து இன்று வரைக்கும் பல துறைகளில் ஆழமான பங்கை வகித்து வருகின்றது. அவ்வாறான ஆழமான செல்வாக்கின் பிரதிபலனே இன்று சிலர் சட்டங்களை உருவாகக் காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

மக்களின் வழக்காறு நடைமுறையிலும் மதங்கள் பாரிய செல்வாக்கைச் செலுத்தி இருக்கின்றமையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. மதத்தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட விடயங்களின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இன்று ஆட்சியாளருக்குப் பணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இறைவனால் தண்டிக்கப்படுதல் என்ற கருத்தியலை சட்டத்தால் தண்டிக்கப்படும் கருத்தியல் ஆகவும் உணரப்படுகின்றது.

பல விடங்களில் இறையியலும் சட்டவியலும் சம நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. பல நாடுகளில் மதக் கோட்பாடு முழுக்க முழுக்க சட்டமாக இருக்கின்றது. இலங்கையிலும் கூட இஸ்லாமிய மதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் தனியார்  சட்டங்களும், இந்து மத நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச வழமை சட்டங்களும், கண்டியச் சிங்களவர்களின் மதம் மற்றும் வழக்காறுகளைக் கொண்ட கண்டிய சட்டங்களும் நடைமுறையில் இருப்பதை அவதானிக்கும்போது மதம் எந்த அளவுக்குச் சட்டத்தில் ஊடுருவி இருக்கின்றது என்பது  உள்ளங்கை நெல்லிக்காய்தான்.

சட்ட சபை சட்டங்கள்

சட்டங்கள் உருவாகுவதற்கு சட்ட சபை ஒரு முன்மாதிரியான அமைப்பாகக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டினதும் சட்ட சபையில் பெரும் எண்ணிக்கையான சட்டங்களை இயற்றும்போது வழக்காறுகள், மதக் கோட்பாடுகள், நடைமுறைகள் எனப் பல விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அதேவேளையில், இருக்கின்ற சட்டங்கள் ஏற்புடையதா? இல்லையா? என்பதையும் இந்தச் சட்ட சபைகளே நிர்ணயிக்கின்றன.

உலகின் பல சட்ட சபைகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாவர். ஆகவே, இவ்வாறான பிரதிநிதிகளைக் கொண்ட சட்ட சபை மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் சார்பாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

இந்த எதிர்பார்ப்புகள் சில இடங்களில் பூர்த்தி செய்யப்படுகின்றதா? என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றன.

நீதிமன்றத் தீர்ப்புகள்

அரசுகள் சட்டத்தை உருவாக்க மட்டும் இருக்கக்கூடாது. மேலும், அந்தச் சட்டங்கள் கால நேரத்துக்குப்  பொருந்துபவையாகவும், நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டவையாகவும், அதேவேளை நிலையானவையாகவும், மக்களால் பின்பற்றக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

அவ்வாறு உருவான எழுத்துருவைச் சட்டங்களின் நடைமுறை சாத்தியங்களைக் கண்காணிக்கும் வேலையை  நீதிமன்றங்கள் பார்த்து வருகின்றன. மேலும், சட்டப் பிரயோகம், சட்டத்துக்கான வியாக்கியானங்கள் என்பவற்றை நீதிமன்றங்கள் வழங்குகின்றன.

நீதிபதிகள் நடைமுறையிலிருக்கும் எழுதிய, எழுதாத சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே பிரச்சினைக்குத் தீர்ப்புகளை வழங்குகின்றனர். இருக்கின்ற சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய விடயங்களைச் சேர்க்கவும் நீதிமன்ற வியாக்கியானங்களும், தீர்ப்புகளும் உதவியாக அமைகின்றன.

சில சந்தர்ப்பங்களில் பொது அறிவின் அடிப்படையில் அல்லது விதிகளின் அடிப்படையிலும் சில தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவை காலப்போக்கில் மற்ற நீதிமன்றங்களால் பின்பற்றப்படுகின்றன. முக்கியமான தீர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு எதிர்கால வழக்குகளை விசாரிப்பதற்கான முன்மாதிரித் திட்டங்களாகும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்புகளும் சட்டங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சர்வதேச உடன்படிக்கைகள்

நவீனகால சர்வதேச சட்டத்தில் சர்வதேச உடன்படிக்கைகள் மிக முக்கிய மூல ஆதாரங்களாக விளங்குகின்றன. ஏனெனில் சர்வதேச உடன்படிக்கையின் மூலம் உருவான சர்வதேச சட்டங்கள் குழப்பங்களுக்கு இடமளிக்காதவையாக இருக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஹட்சன் கூறுகின்றார், “சர்வதேசப் பிரச்சினை ஒன்றைத் தீர்க்கும்போது அப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அம்சம் குறித்து சர்வதேச உடன்படிக்கை ஏதேனும் இருக்கின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவ்வாறு ஏதேனும் சர்வதேச உடன்படிக்கை இருக்கும் இடத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்” – என்கின்றார்.

சர்வதேச உடன்படிக்கைகள் சமீப காலத்தில் மிக முக்கிய மூலாதாரமாக மாறுவதற்கான காரணமாவது  சமுதாயத்தின் சர்வதேச தேவைகளை சுயமாக மக்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவேதான், சர்வதேச உடன்படிக்கைகளுக்கமைய சட்டங்களை இயற்ற வேண்டிய நிலை வந்துள்ளது.

உடன்படிக்கைகள் என்பது இரண்டு நாடுகளுக்கிடையிலான கடப்பாடுகளை உருவாக்குவதே ஆகும் அவ்வாறான கடப்பாடுகள் நடைமுறை சட்டங்களையும் உருவாக்குகின்றன.

சம நீதி

சட்டம் நீதியாகவும் சமத்துவமாகவும் பிரயோகிக்கப்படல் வேண்டும். சம நீதி என்பது நீதித் தீர்ப்புக்களான சட்டங்களைக் குறித்து நிற்கின்றது. இது புதிய சட்டங்களை உருவாக்குவதற்கும் பழைய சட்டங்களைத் திருத்துவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாகும்.

சம நீதி மிகவும் பழைய எண்ணக்கருவாகும். உரோமர் காலத்தில் இது பிரயோகிக்கப்பட்டு வந்திருந்தது. சில சந்தர்ப்பங்களில் சாதாரண சட்டங்கள் தோல்வியடைகின்றபோது நீதி வழங்குவதற்குச் சட்டம் சம நீதியைப் பயன்படுத்தியுள்ளது. சம நீதி என்பது சட்டத்துக்குப் பிரதியீடான ஒன்றல்ல. பதிலாக நெகிழ்ச்சியான சட்ட உருவாக்கமாகும். சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களைப் பிரயோகிப்பதற்குச் சமநீதி என்பது பெரிதும் பயன்படுகிறது.

இன்னும் பல மூலாதாரங்களும் துணை மூலாதாரங்களும் சட்ட உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றன.

எது எவ்வாறு இருப்பினும் மேலுள்ளவற்றிலிருந்து புலப்படுவது யாதெனில் சட்டம் என்பது சடுதியாக உருவாக்கப்பட்டது அல்ல. அவை காலம் காலமாக நம்மவரால் பின்பற்றப்பட்டு வந்தவைகளில் இக்காலத்துக்குத்  தகுந்தவை சட்டங்களாக மாறுகின்றன. மேலும், காலத்தின் தேவைக்கேற்ப சில சட்டங்களும் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு இத்தனை செயல்முறைகளுக்கு மத்தியில் உருவாக்கப்படும் சட்டங்களைத்தான் நாம் சட்டத்தில் ஓட்டை, சட்டம் ஓர் இருட்டறை என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கின்றோம்.

சட்டத்தைக் குறைகூறுவதை சற்று நிறுத்திவிட்டு நாம் சரியாக நடக்கின்றோமா அல்லது மனச்சாட்சிக்காவது சரியாக நடக்கின்றோமா எனப் பார்த்து அதற்குக் கிடைக்கும் பதிலுக்கேற்ப நாம் தொடர்ச்சியாக சட்டத்தை விமர்சிக்கலாமா? இல்லையா? என்பது தொடர்பில் முடிவெடுக்கலாம்.

சட்டத்தில் குறைகள் இல்லை எனக் கூற முடியாது. ஆனால், நாம் அனைவரும் சரியாக இருந்தால் சட்டமே தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *