வயசானாலும், மவுசு குறையாத நாயகிகள்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் கதாநாயகிகளின் ‘ஆயுட்’காலமும் கெட்டியாக இருந்தது.

பானுமதி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, சாவித்ரி போன்றோர் கல்யாணம் ஆன பின்னும் நாயகியராகவே வலம் வந்தனர். டூயட் பாடினார்கள். 50 வயதிலும் தாவணி அணிந்தார்கள்.

ஆனால் இப்போது கதாநாயகிகளின் ‘ஆயுட்காலம்’ குறைந்து விட்டது. மிஞ்சிப்போனால் ஆறு, ஏழு ஆண்டுகள். அதற்குள் செட்டில் ஆகி விட வேண்டும்.

ஆண்டுகள் போகப்போக அண்ணி, அக்கா, அம்மா வேடங்களுக்கு ‘அட்வான்ஸ்’ கொடுக்க வந்து விடுவார்கள். சின்னத்திரைகளும் சுண்டி இழுக்கும்.

இந்த இலக்கணத்தை மீறி ஒருசில நடிகைகள் மட்டுமே 20 ஆண்டுகளைக் கடந்தும் கதாநாயகியாகவே நடிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

அப்படி கொடுத்த வைத்த நடிகைகளில் ‘டாப்-5’ தேவதைகள் குறித்த சிறு பதிவு.

திரிஷா:

1999 ஆம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’ அழகியாக தேர்வு செய்யப்பட்ட திரிஷா, தனக்கான துறையாகத் தேர்வு செய்தது சினிமா துறை.

அதே ஆண்டில் ‘ஜோடி’ என்ற படத்தில் அறிமுகமானார். கதாநாயகி கிடையாது. நாயகியின் தோழி.

‘மவுனம் பேசியதே’ படம் மூலம் பேசப்பட்டார். இன்னும் பேசப்படுகிறார்.

கடந்த 21 ஆண்டுகளாக ஹீரோயினாகவே இருப்பது சாதாரண விஷயம் அல்ல.

ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சிம்பு என அனைத்து தமிழக ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ஒரே நடிகை இவராகத்தான் இருக்கும்

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’வில் நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டாலும், பொன்னியின் செல்வனில் இடம் பிடித்து விட்டார்.

நயன்தாரா:

2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மான சினக்காரே’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நயன்தாரா. அதற்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

தென்னிந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டாராக உயரப்போகிறோம் என அப்போது அவருக்குத் தெரியாது.

தமிழில் ‘ஐயா’ படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார்.

கொஞ்ச நாட்களில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘சந்திரமுகி’யில் முகம் காட்டினார்.

தெலுங்கில் ‘லட்சுமி’ என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார்.

ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ள நயன், இன்றைக்கும் தென் இந்தியாவில் நம்பர்-1 கதாநாயகி.

அனுஷ்கா:

அனுஷ்கா – 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனா ஜோடியாக ‘சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பெயர் கிடைக்கவில்லை. ஆனால், ‘அருந்ததி’ படம் அவருக்கு பெரிய பிரேக்காக அமைந்தது.

தமிழில் ‘ரெண்டு’ படம் மூலம் மாதவன் ஜோடியாக அறிமுகம் ஆனார். விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களுடன் டூயட் பாடினார்.

தற்போது தமிழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், தெலுங்கில் இரு படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, 15 ஆண்டுகளாக புகழ் மங்காமல் ஃபீல்டில் இருக்கிறார்.

காஜல் அகர்வால்:

2004 ஆம் ஆண்டு இந்தியில் ‘கியான் கோ கயா நா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் காஜல் அகர்வால். அந்தப் படம் தோல்வி.

அதன்பிறகு, பாரதிராஜா தனது ‘பொம்மலாட்டம்’ (2008) படத்தில் காஜலை அறிமுகம் செய்தார்.

அந்தப் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆனது. அதற்கிடையில் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானர் காஜல். ஆனால், அந்தப் படமும் அவருக்கு கை கொடுக்க வில்லை.

‘சந்தமாமா’ தெலுங்கு படம் அவருக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. ‘மகாதீரா’ உச்சியில் நிறுத்தியது. அதன் பிறகு தமிழிலும், தெலுங்கிலும் கொடி கட்டிப்பறந்தார்.

கல்யாணத்துக்கும் பிறகும் கமலஹாசன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவருக்கு எங்கியோ மச்சம் இருக்கு.

தமன்னா:

‘மில்க் பீயூட்டி’ என்று வர்ணிக்கப்படும் தமன்னா, 15 ஆண்டுகளுக்கு முன்னர் (2005) இந்திப்படம் மூலம் அறிமுகம் ஆனார். படத்தின் பெயர் – சந்த் சா ரொஸ்தான் சேக்ரா. அதன்பிறகு ‘ஸ்ரீ’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.
தமிழில் ‘கேடி’ என்ற படத்தில் ரவி கிருஷ்ணா ஜோடியாக அறிமுகம். படம் ஓடவில்லை. அடுத்து வந்த ‘கல்லூரி’ வணிக ரீதியாக போகவில்லை என்றாலும், அவருக்கு தமிழில் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது.

‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடிக்கவில்லை என்றாலும், 15 ஆண்டுகளாக இன்னமும் சினிமாவில் இருக்கிறார்.

சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் இல்லை. எனினும் இந்தி ‘அந்தாதூன்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக், தனக்கு ரீ–எண்ட்ரி கொடுக்கும் என நம்புகிறார்.

-பி.எம்.எம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *