நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள்!

“செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக் கல்வியை செயின்ட் மேரி பள்ளியில் படித்துவிட்டு இங்கு வந்து சேர்ந்தேன்.

ஆசிரியர் – மாணவர்கள் இடையே மிகவும் இணக்கமான சூழல் நிலவும். ஆசிரியர்கள், மாணவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் பெற்றோர்களுக்கும் பரிச்சயமானவர்களாக இருந்தார்கள். விடுமுறை தினங்களில் ஆசிரியர் வீடுகளுக்கும் போய் வருவோம். வகை வகையாய் பலகாரங்கள் கிடைக்கும். அப்படியொரு அந்நியோன்யமான சூழல்.

பள்ளிக் கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான். கல்வியைத் தாண்டிய அனுபவங்களும் எங்களுக்குக் கிடைத்தன.

என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் பங்கேற்கும் வாய்ப்புகள் பள்ளியில் கிடைத்தன. 1,500 மாணவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் யாதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார்கள்.

நான் படித்த நாட்களில் ஆசிரியர்கள்தான் என்னை செம்மைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன். அந்த வரிசையில் பாலு வாத்தியாரை என்னால் மறக்க முடியாது. அவர் பாடம் நடத்துகிற முறையே அலாதியானது. ரொம்பவும் கண்டிப்பானவர். நான் டியூஷன் கற்றுக்கொள்ள அவர் வீட்டுக்குச் செல்லும்போது, தான் பயன்படுத்துகின்ற பொருட்களை நேர்த்தியாய் அந்தந்த இடத்தில் வைத்திருப்பார்.

நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு பி.யூ.சி. சேருவதற்கு பொருளாதாரக் காரணங்களால் திணறிக் கொண்டிருந்தேன்.

அதைப் புரிந்துகொண்டு கல்லூரியில் சேருவதற்கு பேருதவி புரிந்தார்.

இன்றளவும் என் தந்தை, “அவர் செய்த உதவியை நான் மதிக்கவில்லையென்று” கடிந்துகொள்வதுண்டு. காரணம், பி.யூ.சி.யில் நான் தவறிவிட்டதுதான்.

எங்களுக்கு ஒரு ஹீரோ மாதிரி தெரிந்தவர் ஆசிரியர் தேவசியா. தாள்களில் அச்சடித்த பாடத்தை நடத்துவதைவிட பள்ளிக்கு வெளியே நிறைந்து கிடக்கும் பொதுவான விஷயங்களைப் பற்றி சொல்லித் தருவார். சமுதாயப் பொறுப்புகளைப் பற்றி விளக்குவார்.

இடதுசாரி சிந்தனை கொண்டவர். கேரள மாநிலத்தவர். எங்கள் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் பாசி படர்ந்து இருந்தால், “உங்களுக்கு தூய்மையான குடிநீர் கொடுக்க வேண்டியது பள்ளியின் கடமை. இப்படி பாசிப் படர்ந்திருக்கும்போது ஒன்று நீங்களாகவே தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், பள்ளி நிர்வாகத்திடம் சென்று முறையிட வேண்டும்” என்று எங்கள் உரிமைகளைக் கற்றுத்தருவார்.

வார இறுதி நாட்களில் பாலைவனம்போல் பரவிக் கிடக்கும் பாலாற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார்.

“ஆறு ஏன் வற்றிக் கிடக்கிறது?” என்று எங்களிடம் கேள்வி எழுப்புவார். நாங்கள் திருதிருவென விழித்திருக்க, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றி சொல்வார்.

பிற மாநிலத்தில் உருவாகி, தமிழ்நாட்டில் பாயும் எல்லா ஆறுகளும் எதிர்காலத்தில் வறண்டுபோகுமென்று அன்றே சொன்னார், அப்போது புரியவில்லை. இப்போது புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எங்கள் பள்ளியில் நடக்கும் ஆண்டுவிழா மிகவும் பிரசித்தம். அந்த ஆண்டு விழாக்களில் எம்.இ.எஸ். என்றழைக்கப்டும் எம்.இ.ஸ்ரீரங்கம் மாஸ்டர் போடும் நாடகத்தில் கலந்து கொள்வதற்காக மாணவர்களிடம் பெரும் ஏக்கமும் போட்டியும் இருக்கும்.

அவர் இயக்கும் நாடகங்களில் பொருட்செலவு மிகுதியாக இருக்கும். நாடக ஜோடனைகள் மற்றும் உடைகள் கோடம்பாக்கத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்படும். இருமுறை அவருடைய தேர்வில் நான் கலந்துகொண்டு தோற்றுப்போனேன்.

எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் ரகுபதி (நமது கவிஞர் மற்றும் சினிமா படைப்பாளி லீனா மணிமேகலையின் தந்தை). ஒரு ஆண்டுவிழாவில் அவரொரு சரித்திர நாடகம் எழுதியிருந்தார். அதற்கு மாணவர்கள் அவ்வளவு பேரார்வம் காண்பிக்கவில்லை.

ரகுபதி மாஸ்டர், என்னைக் கூப்பிட்டு அந்த நாடகத்தின் பிரதான வேடத்தைக் கொடுத்தார். தீவிரமான பயிற்சியின் மூலம் எனது நடிப்பு சிறப்பாக அமைந்தது. அது கண்டு எம்.இ.எஸ். அவர்கள் அவராகவே அடுத்த ஆண்டுக்கான நாடகத்திற்கு என்னை அழைத்தார். அந்நாடகம் பள்ளிக்கிடையேயான போட்டியில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்த அதே நேரத்தில், ரகுபதி மாஸ்டர் வேறொரு நாடகம் எழுதியிருந்தார். ஏதாவது ஒன்றில்தான் நான் கலந்து கொள்ளமுடியும். நான் ரகுபதி மாஸ்டரிடம் கேட்டேன்.

அவர் பொய் மனத்துடன் “நீ எம்.இ.எஸ். நாடகத்தில் நடிப்பது எனக்குத்தான் பெருமை” என்று வாழ்த்தி அனுப்பினார். பிற்காலத்தில் நான் நடிகனாக உருவாவதற்கு அந்தப் பள்ளிக் காலங்களும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.

கேமில்லஸ் என்ற தலைமையாசிரியர் பொறுப்பேற்ற காலக்கட்டம்தான் செயின்ட் ஜோசப் பள்ளியின் பொற்காலம் என்று சொல்லலாம். கல்வியில், விளையாட்டில், கலையில் என அனைத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்கிய காலம் அது.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரின் நீண்ட அங்கிக்குள் குட்டையாய் ஒரு பிரம்பை மறைத்து வைத்திருப்பார். மாணவர்கள், ஏதாவது தவறு செய்தால் அப்பிரம்பு மாயமாய் தோன்றி சுளீர் சுளீர்ரென அடி விழும். அவர்தான் பள்ளிக் கூடத்தை வேறொரு மேல்தளத்திற்கு கொண்டு சென்றார்.

விளையாட்டு விழாக்களை ஒலிம்பிக்ஸ் போல பிரமாண்டமாய் நடத்தினார். அதற்காக பல்வேறு வணிகர்களிடம் ஸ்பான்சர்ஷிப் வாங்கி, ஸ்டேடியம் ஒன்றும் கட்டினார். அந்தக் காலத்தில்தான் தேசிய அளவிற்கு மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் எங்கள் பள்ளியில் தோன்றினார்கள்.

கேமில்லஸ் பிரதரைக் கண்டு ஓடி ஒளிந்த நாட்களை நினைத்தால் இப்போது சிரிப்பாய் இருக்கிறது. அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று பெசன்ட் நகரில் தங்கியிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. நான் பேரார்வத்தோடும் பதற்றத்தோடும் சென்று பார்த்தேன். அவர் என் கையை வாஞ்சையோடு பற்றி, தன் மாணவன் ஒரு பெருமைக்குரிய இடத்தை எட்டிப் பிடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று சொன்னார்.

அதைவிட ஒரு நெகிழ்வான தருணம், என் வாழ்க்கையில் கிடைத்ததில்லை என்றே நினைக்கிறேன். யாரைக் கண்டு பயந்தோடினேனோ அவரே, என் பணியில் மேன்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்தினார். நான் வீடு திரும்புகையில் விம்மி விம்மி அழுதுகொண்டே வந்தேன்.

ஆசிரியர் முத்துகிருஷ்ணன், ஆங்கிலமும், கணிதமும் எடுத்தார். இன்றும்கூட நான் நடித்த படமோ, என்னைப் பற்றிய செய்தியோ அறிந்தால் முதல் போன் அவரிடம் இருந்துதான் வரும்.

தமிழ் உச்சரிப்பை கற்றுத் தந்தவர்கள் ஆசிரியர்கள் ராமசாமி, ரெங்கசாமி. புவியியல் பாடம் நடத்திய நரசிம்மராவை மறக்க முடியாது. கம்பீரம் என்றால் அது தாத்தாச்சாரிதான். ஆறடி உயரம். உச்சிக்குடுமி, செக்கச் செவேல் என்று புல்லட்டில் வருவார். அவர் டைப்ரைட்டிங் மாஸ்டராக இருந்தார்.

ஜி.வி.மாஸ்டர், கே.வி.மாஸ்டர், பிரான்ஸிஸ், கிருஷ்ணமூர்த்தி, டிராயிங் மாஸ்டர்ஸ், முதல் முதல் என் காதுகளில் திருநெல்வேலி தமிழை தவழவிட்ட ஜெயசீலன் மாஸ்டர் இப்படி ஒவ்வொரு மாஸ்டராய் நினைக்கும்போது என் மனம் உருகி காற்றில் மிதப்பது போலிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *