பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்த பெண்!

இந்தியாவின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனையான சியாமளா கோலி, 30 கிலோமீற்றர் தூரமான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நேற்று நிறைவு செய்துள்ளார்.

47 வயதான நீச்சல் வீராங்கனை சியாமளா கோலி, நேற்றையதினம் (19) இலங்கையின் தலை மன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடியை பாக்கு நீரிணை ஊடாக, சுமார் 14 மணி நேரத்தில் (13 மணி 40 நிமிடம்) நீந்தி கடந்துள்ளார்.

இந்நிகழ்வை வட மாகாணசபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆரம்பித்து வைத்தார்.

அதற்கமைய, இச்சவால்மிக்க பயணத்தை உலகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் 13ஆவது நீச்சல் வீரராகவும் சியாமளா கோலி தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

தென்கொரியாவின் குவாஞ்சுவில் நடைபெற்ற 2020 FINA உலகளாவிய வீரர்களுக்கான சுற்றுப்போட்டியில் தெலுங்கானாவை பிரதிநிதித்துவப்படுத்தி சியாமளா கோலி பங்குபெற்றியிருந்தார். 2020 நவம்பரில் பட்னாவில் உள்ள 30 கிலோ மீட்டர் அகல கங்கை ஆற்றை 110 நிமிடங்களில் நீந்தி கடந்து ஆறாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

சியாமளா கோலி, அனிமேஷன் பட தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என்ற பல்வேறு ஆளுமைகளை கொண்டிருக்கும் அதேவேளை நான்கு வருடங்களுக்கு முன்னர், நீச்சலில் ஈடுபட்டு வருகிறார். ஹைதராபாத் கசி பௌலி நீச்சல் தடாகத்தில் அவரது பயிற்றுவிப்பாளரான ஆயுஸ் யாதவின் வழிகாட்டலுடன் பாக்கு நீரிணையை கடப்பதற்கான நீச்சல் சவாலுக்குரிய பயிற்சிகளை அவர் பெற்றிருந்தார்.

பாக்கு நீரிணையை நீந்தி கடக்கும் சாதனையானது சகல பெண்களுக்குமான ஒரு பாரிய சாதனையாக பதியப்படும் என தெரிவித்துள்ள சியாமளா கோலி, பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதனையும் பெண்கள் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கும் இவ்வாறான விடயங்கள் துணையாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சியாமளா கோலியின் சாதனை 67 ஆண்டுகளுக்கு முன்னர் 1954ம்ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி தமிழ் நீச்சல் வீரன் நவரத்தினசாமி புரிந்த சாதனையை மீண்டும் எம்முன் நினைவிற்கு கொண்டுவந்துள்ளது .

தொண்டைமானாற்றில் 1909ம் ஆண்டில் பிறந்த நவரத்தினசாமி அவர்கள் அரசினர் தொழிற்பகுதியில் போதக ஆசிரியராக கடமையாற்றிக்கொண்டிருந்த போது பாக்குநீரிணையை நீந்திக் கடக்க தனது முதலாவது முயற்சியை 1954ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் ஆரம்பித்திருந்த போதிலும் இருபத்து மூன்றரை மணித்தியால முயற்சியின் பின் அசாதாரண காலநிலை காரணமாக முதலாவது முயற்சியைக் கைவிடவேண்டியிருந்தது.

மீண்டும் ஒன்பது நாட்களின் பின்னர் 1954ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி மாலை மீண்டும் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி வாழ்த்துக்கூற நீந்த ஆரம்பித்து சிறிதும் இழைப்பாறாது அடுத்த நாள் மாலை 7 மணிக்கு தமிழகத்தின் கோடிக்கரையைச் ( கோடியாக்கரை) சென்றடைந்தார். இதன் மூலம் பாக்கு நீரிணையை முதன் முதலில் ஒருவழி தூரம் கடந்தவர் என்ற பெயருக்கு உரியவரானார் நவரத்தின சாமி. மேலும் இதனைத் தொடர்ந்து இவர் ‘நீச்சல் வீரர் நவரத்தினசாமி ‘ என அழைக்கப்பட்டார். கோடியாக்கரையில் நவரத்தினசாமிக்கு பெரிதும் வரவேற்பு வழங்கப்பட்டது. இலங்கை மற்றும் தமிழக ஊடகங்களில் இவரின் முயற்சி பெரிதாகப் பேசப்பட்டது.

இலங்கை இந்தியப் பிரதம மந்திரிகள் பாராட்டுச் செய்திகளும் இவருக்கு கிடைக்கப்பெற்றன. இதற்கு மேலாக பிரித்தானியாவின் எலிஸபேத் மகாராணி இலங்கைக்கு வந்த போது இவ்வீரர் மகாராணிக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். நீச்சல் வீரர் நவரத்தினசாமியை கௌரவிக்கும் முகமாக அவரது சாதனை இடம்பெற்று 50 ஆண்டுகள் பூர்த்தியான 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி அன்று அவரது சொந்த ஊரான தொண்டைமனாற்றுச் சந்தியையொட்டி நவரத்தினசாமியின் சிலை திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *