அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் இன்று மாலை மைத்திரியின் இல்லத்தில் கூடுகின்றது சு.க. குழு!

இலங்கையின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நியமித்ததை அடுத்து அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய அரசின் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியி்ன தலைவர் ரணில் விக்கிரமசிங்க தானே நாட்டின் பிரதமர் எனக் கூறிவரும் நிலையில் அவரை அலரி மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்தவாதிகள் காலக்கெடு விதித்திருந்தனர்.

இந்தநிலையில், மைத்திரி – மஹிந்த அரசின் புதிய பிரதமராக நியமிகப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அத்துடன், நல்லாட்சி அரசின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலம் ரணில் விக்கிரமைசிங்கவுக்கு உள்ளது எனவும், மைத்திரி – மஹிந்த அரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஸபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் பொரும்பான்மைப் பலத்தை மைத்திரி – மஹிந்த அரசின் புதிய பிரதமராக நியமிகப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ நிரூபிக்க வேண்டும். என்றும், அதுவரை அலரி மாளிகையை ஒப்படைக்கப் போவதில்லை எனவும் ஐ.தே.க. உறுதி பூண்டது.

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்குச் சென்று நல்லாட்சி அரசின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினர் கொழும்பில் ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்த – மைத்திரிக்கு எதிராகவும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அரசியல் கட்சிகளினதும் மேற்குலகத்தினதும் அழுத்தங்களினால் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தீர்மானித்திருக்கின்றார்.

இலங்கையின் தற்போதைய குழப்பகரமான அரசியல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு கூடவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அமைப்பாளர்களுக்கான கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *