ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் 10 ஆம் திகதி வெளிச்சத்திற்கு வரவுள்ள ரகசியம்!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் தனது நிலைப்பாட்டை விளக்கவில்லை. எதிர்வரும் 10 ஆம் திகதி அவர் மௌனத்தை கலைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேற்படி அறிக்கையை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்திருந்தாலும், அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுவதை மைத்திரிபால சிறிசேன தவிர்த்தே வருகின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் 21/4 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இதனால் அறிக்கை தொடர்பில் மைத்திரி தனது சட்டத்தரணிகளுடன் கடந்த நாட்களில் ஆலோசனை நடத்தினார்.

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கைமீது எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் ஆரம்பமாகின்றது. இதன்போது மைத்திரி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் எனவும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பார் எனவும் அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை பயன்படுத்தி சில தகவல்களை அவர் வெளியிடக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *