ஜனாஸா விடயத்தில் பிரதானிகளின் மந்த நிலையே சர்வதேச நெருக்கடிக்கு காரணம்!

கொரோனா தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பதற்கு கொரோனா செயலணி பிரதானிகள் உறுதியான தீர்மானம் ஒன்றை அறிவிக்காது காலத்தை கடத்துவதே சர்வதேச தலையீடுகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.

இந்த விடயத்தில் அரசியல், மத இன ரீதியில் தீர்மானம் எடுப்பதை விடவும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த
முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சிவில் அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் இதனை வலியுறுத்தியுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹரித ஹேரத் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சுகாதார நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதில் பாரிய பின்னடைவுகள் உள்ளதை நாம் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதன் மூலமாகவே இந்த நிலைமை உருவாக காரணமாகியுள்ளது

இந்த விடயங்களில் நாட்டிற்குள்ளேயே தீர்வுகளை எடுக்க வாய்ப்புகள் இருந்தும் மத விடயங்கள், சுகாதார வழிமுறைகள் என கூறிக்கொண்டு சர்வதேச தலையீடுகள், கருத்துக்களை கேட்க வேண்டிய நிலைமை உருவாக்கியுள்ளது என்றால் அதற்கு நாம் சரியான தீர்மானம் எடுக்க முடியாது போனமையே காரணமாகும்.

முஸ்லிம் உடல்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரிப்பதா என்பதை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது, அப்போதிலிருந்தே முரண்பாடுகள் எழ ஆரம்பித்துவிட்டன. உறுப்பினர்கள் கூட வெவ்வேறு மாறுபட்ட தீர்மானங்களை அறிவித்தமையே சர்வதேச தலையீடுகள் ஏற்படவும் காரணமாக அமைந்து விட்டது.

எனவே இப்போதாவது அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை அறிவிக்க வேண்டும். அரசியல் தீர்மானமாகவோ, மத இன அடிப்படையிலான தீர்மானமாக அமையாது சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டும் எமது நாட்டின் பௌதீக காரணிகளை கருத்தில் கொண்டும் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த தீர்மானங்களை நிபுணர்களே முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலகத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் மிக மோசமாக உள்ளது, முதலாம் இரண்டாம் அலைகளை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளும் கூட இன்று மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இலங்கையும் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும். இரண்டாம் அலையின் தாக்கமே இன்றுவரை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதாமாதம் தொற்று நோயாளர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். எனவே நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக ஒருபோதும் கூற முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *