விமான நிலையங்களை மீள திறக்க திட்டம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையங்களை திறக்க முடியும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (02) நடைபெற்றபோது, சந்திம வீரக்கொடி, பிரமித பண்டார தென்னக்கோன், தயான் கமகே உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரக்ள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை வழங்க 80 சுற்றுலா சேவை வழங்கும் நிலையங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுற்றூலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி கிமார்லி பெர்னாந்து சுட்டிக்காட்டினார்.

கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலா சேவை வழங்கக் கூடிய ஹோட்டல்கள் மற்றும் சுற்றூலத்துறை நிறுவனங்கள் இதற்காக பதிவுசெய்ய முடியும் என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அவற்றின் தரத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க முடியும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி தெரிவித்தார்.

பைசர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை அனுமதித்த முதலாவது நாடாக ஐக்கிய இராச்சியம் அறிவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் எதிர்காலத்தில் இந்தத் தடுப்பூசி வெற்றியளித்தால் விமான நிலையங்களை விரைவில் திறக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *