கொரோனா வைரஸ் முதலில் பரவியது அமெரிக்காவில்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டதாகவே நாமெல்லாம் கொவிட் 19 பற்றி அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு முன்னதாகவே அது அமெரிக்காவில் பரவ ஆரம்பித்து விட்டது என்பதற்கான ஆதாரங்கள் சில அமெரிக்காவில் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்காவின் ஒன்பது மாநிலங்களில் ரெட் குரோஸ் அமைப்பினால் இரத்ததானத்துக்காகக் கொடுக்கப்பட்ட 7,000 இரத்த மாதிரிகைகளைப் பரிசோதித்ததில் 106 இரத்த மாதிரிகளில் கொவிட் 19 க்கு எதிரான உயிரணுக்கள் உண்டாகியிருப்பதைக் கவனித்திருக்கிறார்கள். அவை டிசம்பர் 13, 2019 இலிருந்து ஜனவரி 17, 2020 வரை சேகரிக்கப்பட்டவையாகும். அப்படியானால் அங்கு டிசம்பருக்கு முதலேயே கொரோனாத் தொற்றுக்கள் பரவ ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும்.

மார்கழிக் கடைசி வாரத்தில்தான் சீனாவில் வுஹானில் கொவிட் 19 கிருமிகள் அடையாளம் காணப்பட்டதாக உத்தியோகபூர்வமாகக் கூறப்பட்டாலும் நவம்பர் மாதத்திலேயே வியாதி ஆங்காங்கு பரவியிருந்ததாகச் ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகள் குறிப்பிடுகின்றன.

அதேபோலவே பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகளில் டிசம்பர் மாதத்திலேயே பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில நோயாளிகளின் இரத்தத்தில் கொவிட் 19 கிருமிகள் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *