கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பாரா?

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 100 பேரிடம் நடத்திய சோதனையில், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, அதிகமாக டி செல் (T Cell) எதிர்வினை இருக்கிறது.

இப்படி கூடுதலாக டி செல்கள் இருப்பது, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு சிறந்த பாதுகாப்பாக இருக்குமா என இதுவரை தெளிவாகவில்லை.

இது நோய் எதிர்ப்பு சக்தி புதிரின் ஒரு பகுதி தான். இன்னும் நிறைய கற்க வேண்டியி ருக்கிறது என இங்கிலாந்தின் ஆராய்ச்சிக் குழுவினர் சொல்கிறார்கள்.

ஒரு முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர், மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பாரா? இருப்பார் என்றால், எத்தனை காலத்துக்கு அவர் உடலில் அந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

நோயால் பாதிக்கப்பட்டு, சுமாராக 10 நாட்களுக்குப் பிறகு, நோயாளிகளின் உடல், ஆன்டி பாடிகள் எனப்படும் எதிர்ப்பான்களை உருவாக்கும் என்பதை விஞ்ஞானிகள் அறிவார்கள். நோயை எதிர்த்துப் போராடும் இந்த எதிர்ப்பான்கள் காலப்போக்கில் குறைந்துவிடும் என்று தெரிகிறது. இந்த ஆண்டிபாடிகள் வைரஸை தடுப்பதற்காக அதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும்.

விஞ்ஞானிகள் நோய் எதிர்ப்புச் செல்களில் ஒன்றான டி செல்களும் (T Cell) கோவிட் 19 நோயை எதிர்த்துப் போராடுவதைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த டி செல்கள், வைரஸ்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் செல்களை தாக்குகின்றன. இதை cellular immune response என்கிறார்கள். இது ஒரு முக்கிய திருப்பமாக அமையலாம்.
இந்த ஆராய்ச்சி குறித்து மதிப்பாய்வு செய்யப்படவில்லை. ஜர்னல்களில் பதிப்பிக்கப்படவில்லை. டி செல்கள் கொரோனாவுக்கு எதிரான ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியை இங்கிலாந்தின் கொரோனா வைரஸ் இம்மியூனாலஜி கன்சார்டியம் மேற்கொண்டது. இதில் பர்மிங்காம் பல்கலைக்கழகம், தி என் ஐ ஹெச் ஆர் மான்செஸ்டர் கிளினிக்கல் ரிசர்ச் ஃபெசிலிட்டி, பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.

“டி செல்களின் எதிர்வினை, ஆரம்பகால ஆன்டி பாடி எதிர்வினைகளை விட நீண்ட காலத்துக்கு இருக்கும் என முன்பு வந்த முடிவுகள் சொல்கின்றன. இது கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என, பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்தைச் சேர்ந்த (ஆலோசகர்) தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சமீஸ் லதானி சொல்லி இருக்கிறார்.

வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரஸ் பாதித்த பின்பும் 6 மாத காலத்துக்கு இருக்கும் எனக் காட்டுவதற்கு செய்த இந்த ஆராய்ச்சி உலகிலேயே முதல் முறையாக செய்யப்பட்டது என பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் மாஸ் கூறி இருக்கிறார்.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 23 ஆண் மற்றும் 77 பெண் சுகாதாரப் பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களுக்கு மிதமான கொரோனா அறிகுறிகள் (moderate symptoms) இருந்தது அல்லது கொரோனா அறிகுறிகள் இல்லை (asymptomatic). இவர்களில் யாரும் கொரோனா வைரஸால், பெரிய உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா அறிகுறி உள்ள ஒருவருக்கு, ஒரு நல்ல டி செல் எதிர்வினை, மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு எதிராக அதிக பாதுகாப்பை கொடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள், ஒரு பெரிய நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வினையை உண்டாக்கிக் கொள்ளாமலேயே, வைரஸை எதிர்த்து போரிட முடியலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து சோதனைகளில், டி-செல் எதிர்வினைகளை சரி பார்க்க வேண்டியது அவசியம் என்று கூறி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கொரோனா அறிகுறிகள் இருக்கும் தனி நபர்கள், எதிர்காலத்தில் மீண்டும் தொற்றுக்கு உள்ளாகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய நாம் நிறைய ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் பேராசிரியர் மாஸ்.

“இந்த ஆராய்ச்சி மூலம் SARS-CoV-2 நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நாம் புரிந்து கொள்வதில் ஒரு அடி முன்னேறி இருக்கிறோம்” என பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் இம்மியுனாலஜியின் தலைவர் அர்னே அக்பர் சொல்லி இருக்கிறார்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு சக்திக்கு டி-செல்கள் பங்களிப்பை ஆராய்ச்சி செய்வதன் மூலம், தொற்றுக்குப் பிறகு தனிநபர்களின் பாதுகாப்பு குறித்த, சிக்கலான கேள்விகளை நோக்கி நெருக்கமாக நகர்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் அக்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *