ரிஷாத் சமல் சந்திப்பால் தெற்கு அரசியலில் பதற்றம்!

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளக்கூடாது என ஆளுங்கூட்டணியின் பங்காளிக்கட்சிகளும், சிங்கள தேசியவாத அமைப்புகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
வன்னிக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ச, ரிஷாட்டை சந்தித்தபோது புன்னகையுடன் வரவேற்று உரையாற்றினார். இது தொடர்பான புகைப்படம் வெளியானதும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

தேர்தல் காலத்தில் ரிஷாட்டை விமர்சித்தவர்கள், 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்காக அவரை நாடுகின்றனர் என்ற கோணத்திலும் சொற்கணைகள் தொடுக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன், எதிரணிகளும் அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது என குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் 20 தொடர்பில் தமது கட்சி நிலைப்பாட்டை அறிவிக்காமல் ரிஷாட் பதியுதீனின் கட்சி மௌனம் காத்துவருகின்றது. இதனால் அக்கட்சி அரசுடன் இணையக்கூடும் என்ற ஊகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ரிஷாட் வந்தால் விரட்டியடிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரிஷாட் பதியுதீன் இருக்கும் அரசில் தான் இருக்கப்போவதில்லை என்ற உத்தரவாதத்தை ஏற்கனவே தூய ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பிலவும் குறிப்பிட்டுள்ளார்.

” அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் ஆதரவு தேவையில்லை. எதிரணில் இருந்து வேண்டுமானால் சட்டமூலங்களுக்கு ஆதரவு வழங்கலாம்.” – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரிஷாட்டை இணைத்துக்கொண்டால் சிங்கள மக்களின் ஆதரவை வழங்கநேரிடும் என்று அரசுக்கு சிங்கள தேசியவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் தான் ரிஷாட்டை சந்திக்கவில்லை என சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *