இந்தியாவில் மூடப்பட்டுள்ள திரையரங்குகலால் 9 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம்!

கொரோனா பதம் பார்த்த துறைகளில் பிரதானமானது திரைப்படத்துறை என்று சொல்லலாம்.

கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலில், சில பல நிபந்தனைகளுடன் சின்னத்திரை ஷூட்டிங் நடத்த மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன.

அடுத்து பெரிய திரை படப்பிடிப்புக்கும் பச்சைக்கொடி காட்டின.

ஒவ்வொரு தளர்வின் போதும், “சினிமா தியேட்டர் திறப்பதற்கான அறிவிப்பு வரும்’’ என எதிர்பார்த்து அந்தத் துறையினர் நொந்து நூலாகி விட்டார்கள்.

கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் உள்ள சுமார் 10 ஆயிரம் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

திரையரங்க உரிமையாளர்களுக்கு இந்த 6 மாதத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

“அக்டோபர் மாதத்திலாவது சினிமா தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என இந்திய மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சினிமா உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள், ஹேஷ்டேக்குகளை உருவாக்கி “சினிமாவைக் காப்பாற்றுங்கள்’’, “சினிமா தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுங்கள்’’ என அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அவர்களில் சிலரது கருத்து:

நடிகை ராதிகா சரத்குமார்:

“கொரோனா உதயமான சீனாவில் கூட சினிமா தியேட்டர்களை திறந்து விட்டார்கள்.

உலகமெங்கும் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

இந்தியாவில் இன்னும் பலர் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடை பிடிப்பதில்லை. இதனால் தியேட்டர்களைத் திறக்க அரசாங்கம் யோசிக்கிறது என்று நினைக்கிறேன்.

தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால் பலர், படப்பிடிப்பை நடத்தாமல் உள்ளனர். சில நடிகர்களும் அதனால் தான் தங்கள் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை.

தியேட்டர்கள் திறந்தால் மட்டுமே, மீண்டும் வழக்கம்போல் ஷூட்டிங் நடக்கும். எனவே சினிமா தியேட்டர்களை விரைவில் திறக்க வேண்டும்.

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி:

“பட்டினி கிடப்பதைவிட கொரோனாவால் செத்துப்போவது மேல் என நான் நினைக்கிறேன். வீட்டில் சும்மா இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி வேலை செய்யலாம் என பல நிறுவனங்களுக்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நானும் சில நாட்களாக ஷூட்டிங் செல்கிறேன். பல மாதங்களுக்கு பிறகு சினிமா தொழிலாளர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள்.

சினிமா தியேட்டர்களும் விரைவில் திறக்கப்படும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்களும், சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்கிறோம். எனவே தியேட்டர்களை திறக்க அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும்.’’

இயக்குநர் சீனு ராமசாமி:

“தியேட்டரில் ஒரு படம் ரிலீஸ் ஆகாவிட்டால், இந்தத் துறையில் உள்ள 24 சங்கத்து ஆட்களும் பாதிக்கப்படுவார்கள். சில வேலைகளை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால் தியேட்டர்கள் திறந்தால் மட்டுமே, தியேட்டரில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.

ஒரு தியேட்டர், 10 முதல் 20 பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வேலை தெரியாது. எனவே தியேட்டர்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதி விரைவில், சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறை சார்ந்தவர்களிடம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *