நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைக்கு மைத்திரியே காரணம்!

ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் தேசிய பாதுகாப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, கடந்த ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட விரிசலுக்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் தேசிய பாதுகாப்பு குறித்து 7 வரிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் குறித்தும் ஜனாதிபதியின் இந்த உரையில் விசேட பார்வை செலுத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் இடம்பெற்றபோது எமது அரசாங்கமே ஆட்சியிலிருந்தது. தாக்குதல் சம்பவத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டிருந்த படியினால் அவரை பிரதான பிரதிவாதியாக பெயரிட்டேன். அவர் பாதுகாப்பு அமைச்சராக எடுக்க வேண்டிய முயற்சிகள் எதனையும் செய்யவில்லை.

அவரை திருத்த முடியாத படியினால் உங்களிடமே ஒப்படைத்துவிட்டோம். அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாதிபதிக்கு நேரடியாக தொலைபேசி மூலம் ஏப்ரல் 4ஆம் திகதி தெரியப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு சபையையும் அவர் நடத்தியிருக்கவில்லை.

அதேபோல சிங்கப்பூருக்கு சென்றிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கே நாடு திரும்பியிருந்தார். 03 மற்றும் 09 மணிகளில் அன்றைய தினமே இரண்டு விமானங்கள் ஸ்ரீலங்காவுக்கு வந்த போதிலும் அதில் ஆசனங்கள் இல்லாததினால் வரமுடியாமற் போனதாக பொய் கூறினார்.

ஆனால் அந்த இரண்டு விமானங்களிலும் வெறுமையான ஆசனங்கள் இருந்தன என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். அந்த நாட்களில் பாதுகாப்பில் விரிசல் இருந்ததை ஏற்றுக்கொள்கிறோம். இந்நிலையில் இன்று ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின்படி பாதுகாப்பு அமைச்சினை வைத்திருக்க முடியாது.

ஆகவே இன்று பாதுகாப்பு அமைச்சர் என்கிற ஒருவர் இல்லாத நிலையில்தான் நாடு இருக்கின்றது. இராணுவத்தினருக்கு வழங்க வேண்டிய தளம் வழங்கப்படவில்லை. பல்வேறு குறைப்பாடுகள் உள்ளன. எனவே சஹ்ரான், ஈஸ்டர் தாக்குதல், கோவிட்-19 போன்றவற்றின் மீது கவனம் செலுத்தாமல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும்படி கோருகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *