வயதான மஹிந்தவால் எவ்வாறு 85 அரச நிறுவனங்களை பராமரிக்க முடியும்?

70 வயதைக்கடந்துள்ள மஹிந்த ராஜபக்சவின்கீழ் 85 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதியவர் ஒருவரால் எவ்வாறு அவற்றை வினைத்திறன்மிக்கதாக இயக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, ராஜபக்சக்களுக்கு தேவையான வகையிலேயே புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதியால் அமைச்சுபதவி வகிக்கமுடியாது. அப்படியிருந்தும் அரசியலமைப்பைமீறும் வகையில் பாதுகாப்பு அமைச்சை அவர் தம்வசம் வைத்துள்ளார்.
அடுத்ததாக மஹிந்த ராஜபக்சவுக்கு 74 வயதாகின்றது. அவரின்கீழ் 85 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கலாச்சாரம் உட்பட சில அமைச்சுகளும் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. எனவே, அவரால் எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கமுடியும் என்ற வினாவும் எழுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பது தெரியாது. சிலவேளை தமது ஆட்சிஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் தமக்கு தேவையான வகையில் ராஜபக்சக்கள் அரசியலமைப்பை உருவாக்கக்கூடும் என்ற அச்சநிலையும் காணப்படுகின்றது.
எனவே, இவற்றுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடுவதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விருக்கின்றோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *