பத்து ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான்! ஜீவன் சூளுரை!

” யார் என்ன சொன்னாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, மலையகத்தில் இவருக்கு பல்வேறு இடங்களில் பாராட்டுகளும், வரவேற்புகளும் இடம்பெற்றது.

கண்டி நகரிலிருந்து புஸ்ஸல்லாவ வழியாக தவலந்தென்ன சந்தியின் ஊடாக பூண்டுலோயா மற்றும் தலவாக்கலை நகரின் வழியாக கொட்டகலையை வந்தடைந்த இவருக்கு கம்பளை, பூண்டுலோயா, தலவாக்கலை, கொட்டகலை ஆகிய நகரங்களில் மக்கள் திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன்பிறகு, கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனம் அமைந்துள்ள சீ.எல்.எப்க்கு வருகை தந்த இவர் அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடியினை கம்பத்தில் ஏற்றினார்.

அங்கு திரண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை யார் விமர்சித்தாலும், எடுத்தெறிந்து பேசினாலும் மக்களின் சேவையை இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த புதிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுப்பதில் பின்வாங்கப்போவதில்லை.

தேர்தல் அறிவிக்கப்பட்ட காலங்களில் 40 நாட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த மலையக மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அதைப்போன்று இனிவரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்க போகும் அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என ஒரு புறத்தில் விமர்சிப்பும், மறுபுத்தில் எதிர்பார்ப்பும் உள்ள நிலையில் சிறப்பான அபிவிருத்திகளை இங்கு முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இ.தொ.காவின் நிதிச்செயலாளர் ரமேசுக்கும் வரவேற்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *