சமூக விடுதலைக்கான பயணத்தில் இலக்கை அடைந்தே தீருவோம்! – வேலுகுமார் எம்.பி. சபதம்

” லயன் என்ற சிறைக்குள்ளிலிருந்து பெருந்தோட்டத்தொழிலாளர்களை மீட்டெடுத்ததுபோல் அடிமை சாசனமாக விளங்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கு சமாதி கட்டி, தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.”

-இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார் இன்று சபையில் உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ( 03) பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிகரமான செயற்பாடுகளால் மஹிந்த அணி எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகேயும் குழப்பிபோயுள்ளார்.
இதை அவரது உரையிலிருந்து தெளிவாக அறியமுடிந்தது. எவ்வித புள்ளி விபரங்களும் இன்றி குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். எனவே, அவை குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

ஒரு இனத்தினுடைய விடுதலையை – விடிவையே யுகமென கருதுகின்றோம். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரையான காலப்பகுதியானது மலையக மக்களுக்கான யுகம் என்றே கூறவேண்டும்.

அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையின்கீழ் எமது மக்களுக்கான விடிவை இக்காலப்பகுதிக்குள் பெற்றுக்கொடுத்தோம். நாட்களானது வெறுமையாக உருண்டோடவில்லை.

தோட்ட நிர்வாகத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த தோட்டப்புற பாடசாலைகளுக்கு விடுதலையை பெற்றுக்கொடுத்தோம். அதேபோல் லயன் அறைகளுக்குள் முடக்கப்பட்டிருந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து – காணி உரிமையுடன் தனி வீடுகளை வழங்கி, நில உரிமையாளர்களாக்கியுள்ளோம்.

அரச நிர்வாக மற்றும் அபிவிருத்தி பொறிமுறைக்குள் தோட்டப்பகுதிகளையும் உள்வாங்கும் வகையில் பிரதேசசபை சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

தடைகளை உடைப்பதற்கு தற்துணிவின்றி பல வருடங்களாக நாடாளுமன்றத்தில் கதிரையை சூடாக்கிக்கொண்டிருந்தவர்களுக்கு, மூன்றாண்டு காலப்பகுதியில் ‘முடியும்’ என்பதை நிரூபித்து – சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றோம். அதிகார சபையையும் மலரச்செய்தோம்.

மலையக மக்கள் பல வருடங்களாக முகவரியற்றவர்களாகவே இருந்தனர். இந்நிலைமையை மாற்றியமைத்துள்ளோம். எனவே, பெருந்தோட்டப்பகுதி மக்களின் வீடுகளுக்கும் இலக்கம் வழங்க, தபால்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இதற்கான பொறிமுறை விரைவில் தயாரிக்கப்படவேண்டும்.

அதேவேளை, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரமும் பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. எமது சமூக விடுதலைக்கான பயணத்தில், இந்த பிடிக்குள் இருந்தும் எமது மக்களுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தோட்டத்தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வேலியாகவே கூட்டு ஒப்பந்தம் இருந்து வந்துள்ளது. அந்த கட்டுப்பாட்டு வலயத்தை உடைப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையும் நாம் செய்வோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைப்போம்.

எனவே, இதுவரை காலமும் மலையக மக்களுக்கு துரோகமிழைத்தவர்கள், பாவத்திலிருந்து மீளவேண்டுமானால், மக்களுக்கு இனியாவது நன்மைகளை செய்யவேண்டும். தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நல்லாட்சியால் மலையகத்துக்கு சிறப்பான சேவைகள் கிடைக்கின்றன என்பதாலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது வாக்களித்தனர். இதை நாம் வரவேற்கின்றோம்.

மலைநாட்டு அமைச்சின் சேவையில் குறைபாடுகளை கண்டிருப்பார்களால், தில் இருந்திருக்கும் பட்சத்தில், வாக்கெடுப்பைகோரி அதற்கு எதிராக வாக்களித்திருக்கலாம். அதை செய்யவில்லை. இதன்மூலம் எமது சேவைகள் சரியான வழியில் இடம்பெறுகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *