அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தடம் பதித்த தமிழ்ப் பெண்!

உலகின் சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவின் துணை அதிபராகும் வாய்ப்பு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபருக்கான தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

இவர் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டதுடன், சென்னைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம்.
கமலா ஹாரிஸின் தாயாரான சியாமளா கோபாலன், 1938-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சியாமளா,  டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியாவுக்குச் சென்று பட்ட மேற்படிப்பை முடித்தார்.
பின்னர் அமெரிக்காவில் தங்கிவிட்ட சியாமளா,  அங்கு டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஜமைக்காவில் பிறந்தவரான டொனால்ட் ஹாரிஸ், மனித உரிமைக்கான போராட்டத்தின்போது சியாமளாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருந்தபோது, இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின் சியாமளாவின் பராமரிப்பில் கமலா ஹாரிஸ் வளர்ந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சில முறை அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
கமலா ஹாரிஸ், ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இதன்பிறகு  2003-ம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரலாகவும், கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும் அவர் இருந்துள்ளார்.

இதன்மூலம் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவரான கமலா ஹாரிஸ், காலப்போக்கில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
2016-ம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். இதன்மூலம் அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால் இந்தத் தேர்தலில் ஜோ பிடனிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸை துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜோ பிடன். இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் இந்திய சமூகத்தினரின் வாக்குகளைக் கவர்வது ஜோ பிடனின் திட்டமாகும்.

ஜோ பிடனின் அறிவிப்பின் மூலம்,   துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ்.
இந்தத் தேர்தலில் அவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கமலா ஹாரிஸுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *