பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன!

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

ஆளப்போவது எந்த கட்சி, வெற்றிப்பெறப்போகும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு விகிதாசார முறைப்படி எவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன , தேசியப்பட்டியல் ஆசனங்கள் எவ்வாறு பங்கிடப்படுகின்றன என்பது தொடர்பில் பார்ப்போம்.

ஆசன ஒதுக்கீடு 

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டமொன்றில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழிக்க வருவதே செல்லுபடியான வாக்குகளாகும்.

அவ்வாறுவரும் தொகையிலிருந்து – , செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும்.

அதன்பின்னர் வரும் வாக்கு தொகையை மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களால் (போனஸ் ஆசனம் ஒதுக்கிய பின் வருவது) பிரிக்க வருவதே முதல் சுற்றில் ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும்.

உதாரணமாக 2015 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டு இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்.

2015 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 734 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 32 ஆயிரத்து 788 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 946 ஆகும்.

இவ்வாறு செல்லுபடியான 3 லட்சத்து 87ஆயிரத்து 946 வாக்குகளில் இருந்து, 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகள் கழிக்கப்படும். (நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே 5 வீதத்துக்கும் மேல் வாக்குகளைப்பெற்றிருந்தன.)

அதேபோல் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 678 ஆககும். ( 387,946 – 11,678)

இதன்படி செல்லுபடியான   வாக்குகளில் இருந்து 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகளை கழிக்க வரும் எண்ணிக்கை 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆகும்.

இந்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளே ஆசன பங்கீட்டுக்கான வாக்குகளாக கருத்திற்கொள்ளப்படும். நுவரெலியா மாவட்டத்துக்கு 8 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு ஆரம்பத்திலேயே போனஸ் ஆசனம் ஒன்று ஒதுக்கப்படும். எஞ்சிய 7 ஆசனங்களே கட்சிகளுக்கு பங்கிடப்படும்.

இதன்படி 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளை 7 ஆல் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்க வருவது 53 ஆயிரத்து 753 வாக்குகளாகும். அதாவது முதற்சுற்றில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும். கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை குறித்த எண்ணிக்கையில் பிரிக்க வரும் மதிப்பீட்டுக்கமையவே ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது 2 லட்சத்து 28 ஆயிரத்து 920 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை ஒரு ஆசனத்துக்கான வாக்குகளால் பிரிக்க வருவது (228,920 /53,753) 4 ஆகும். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆனங்கள் ஒதுக்கப்பட்டது.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 லட்சத்து 47 ஆயிரத்து 348 வாக்குகளை ப்பெற்றிருந்தது. (147,348/53,753) இதனை பிரிக்க வருவது 2 ஆசனங்கள். அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மீதம் ஒரு ஆசனம் இருக்கின்றது. 5 வீதத்துக்கும் மேல் பெற்ற வேறு கட்சிகளும் இல்லை. இதன்போதே எஞ்ஞசி வாக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டு 2ஆம் சுற்றில் ஆசனப்பகிர்வு இடம்பெறும்.

4 ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 ஆயிரத்து 908 வாக்குகளே எஞ்சியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு 39 ஆயிரத்து 842 வாக்குகள் எஞ்சியுள்ளன. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கே அந்த ஆசனம் வழங்கப்படும்.

இதன்படி  ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஐக்கிய தேசியக்கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும் நுவரெலியா மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியில் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருந்தவர்களும் சபைக்கு தெரிவானார்கள்.

முதல் சுற்றிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டால் எஞ்சிய வாக்குகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

தேசியப்பட்டியல்…….

தேசிய மட்டத்தில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 29 ஆல் பிரிக்கப்படும்.

2015 இல் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 11,166,975 ஆகும். இதன் 29 இல் பிரிக்க வருவது, 3 லட்சத்து 85 ஆயிரத்து 67 ஆகும்.

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை இந்த எண்ணிக்கையில் பிரிக்கவருவதற்கேற்ப தேசிய பட்டியல் ஆசனங்கள் பகிரப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *