மரணமடைந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் நடித்த கடைசித் திரைப்படம்!

விரும்பியவர் விட்டுப் பிரிந்த பின்னரும் வாழ்வு இனிக்குமா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது ‘தில் பேச்சாரா’. சமீபத்தில் மரணமடைந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் நடித்த கடைசித் திரைப்படம் இது.

உலகின் எல்லா மொழிகளிலும் தேவதைக் கதைகளுக்கு இடமுண்டு. தன்னைத் தேடி வரும் தேவகுமாரனுக்காகக் காத்திருக்கும் தேவதை, அந்த கணத்துக்குப் பின்னர் காதலையே தன் வாழ்க்கையாகக் கொள்வார்.
இதை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கிற ஆயிரக்கணக்கான ரொமான்ஸ் திரைப்படங்களில் ஒன்றாகிறது ‘தில் பேச்சாரா’.

கூடவே, உருகி உருகிக் காதலித்த நபர் பிரிந்து சென்றால் அவர் குறித்த நினைவுகளே நம்மைத் தாங்கி நிற்கும் என்று சொன்ன விதத்தில் சிறிதே வித்தியாசப்படுகிறது.

முரண்களால் விளையும் ஈர்ப்பு!

தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கிஸீ பாசு (சஞ்சனா சங்கி), எங்கு சென்றாலும் ஒரு பேக்கில் ஆக்சிஜன் சிலிண்டரையும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தைச் சுமப்பவர்.

பதின்ம வயதில் இது குறித்து தோன்றும் அசூயை, அவரைத் தினசரி வாழ்வின் இன்பங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. துக்க நிகழ்வுகளோடு பிணைத்துக் கொள்வது உலகத்திற்கான ஒட்டுமொத்த துன்பத்தையும் தாங்கிக் கொண்ட ஆசுவாசத்தை அவருக்குத் தருகிறது.
இப்படியொரு நபர், வாழ்க்கையில் எந்த விஷயம் குறித்தும் கவலை கொள்ளாத ஒருவரைப் பார்த்தால் துணுக்குறத்தானே செய்வார்?

அப்படித்தான் இம்மானுவேல் ராஜ்குமார் ஜுனியருடன் (சுஷாந்த்சிங் ராஜ்புத்) அவரது முதல் சந்திப்பு நிகழ்கிறது.

பார்த்தவுடனேயே, சந்திக்கும் பெண்களிடம் எல்லாம் காதல் வயப்படும் ஒரு ரோமியோ என்ற எண்ணம் எழுகிறது.

ராஜ்குமாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்றறியும்போது, மெல்ல அந்தப் பார்வை மாறுகிறது.

ஆனாலும், தொடர்ந்து கிஸீ மீது காதல் மழை பொழிகிறார் ராஜ்குமார்.

அன்பு முடிவற்றது!

தத்துவார்த்தமாக நோக்குகிறேன் பேர்வழி என்று வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் உர்ரென்று கடந்துபோகும் கிஸீ, ராஜ்குமாரின் வரவுக்குப் பின் புன்னகையை எந்நேரமும் தன் முகத்தில் ஏந்தி நிற்கிறார். இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதில்லை என்று முடிவெடுக்கும் அளவுக்கு அந்த உறவு வலுப்படுகிறது.

கிஸீயின் ஆசைகளை ராஜ்குமாரும், ராஜ்குமாரின் ஆசைகளை கிஸீயும் பூர்த்தி செய்யத் துடிக்கும் அளவுக்கு அவர்களது காதல் விண்ணோக்கி உயர்கிறது. அந்த நேரத்தில்தான், கிஸீக்கு மிகவும் பிடித்த அபிமன்யூ வீர் என்ற இசையமைப்பாளரைத் தேடி பாரிஸுக்கு செல்கின்றனர்.

அந்தச் சந்திப்பு இருவரது வாழ்வையும் மாற்றுகிறது. மரணத்துக்குப் பின்னும், பிரிந்துபோன துணையை நினைத்து வருந்தி அழத்தான் வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது படத்தின் கிளைமேக்ஸ்.

முடிவில் சுஷாந்த் சிங்குக்கு தனியாக ‘அஞ்சலி’ செலுத்தும்போது மனம் கனக்கிறது.

பிளாஸ்டிக் பொம்மை!

இம்மானுவேல் ராஜ்குமார் ஜுனியராக வரும் சுஷாந்த்சிங் ராஜ்புத், கிஸீ பாசுவாக வரும் சஞ்சனா சிங், இருவரது பெற்றோர், வீடு என்று காண்பிக்கப்பட்டாலும் அவர்களது சமூக பொருளாதார வாழ்க்கை பற்றிய விவரணைகளோ, தகவல்களோ அதிகம் திரைக்கதையில் இடம்பெறவில்லை.
மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் இருவருக்கு இடையே நடக்கும் காதல்தான் கதை என்பதால், அந்த விவரங்கள் அதிகப்படியானதாக இருக்குமென்று இயக்குநர் முகேஷ் சாப்ரா எண்ணியிருக்கலாம்.

ஆனால், அதுவே வழக்கமான ‘ரொமான்ஸ் பார்மெட்’ பற்றிய சித்திரத்தை நமக்குள் உருவாக்கிவிடுகிறது.

முதலிரண்டு சந்திப்புகளிலேயே ராஜ்குமார் மீது கிஸீக்கு ஈர்ப்பு உண்டானாலும், இருவருக்குமான முரண்களை மீறி காதல் பெருகுகிறது என்பதனை இன்னும் சில காட்சிகள் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

கிஸீயின் கல்லூரி வாழ்க்கை, ராஜ்குமாரின் தினசரி நிகழ்வுகள், அவரது குடும்பத்தினரின் பின்னணி பெரிதாக விளக்கப்படாததற்கு பட்ஜெட் அல்லது நேரக் குறைவு அல்லது இன்னபிற காரணங்கள் இருக்கலாம்.

இதனால், உயிர்ப்பை மிகக்குறைவாகக் கொண்டிருக்கிற ஒரு பிளாஸ்டிக் பொம்மையாகவே திரைக்கதை இருக்கிறது.

அழகோ அழகு!

ஒடுங்கிப்போன கன்னம், சோர்வுற்ற கண்கள், முகத்தில் துருத்திக் கொண்டு தெரியும் செயற்கைத் தனத்தை மீறிய துள்ளல் நடிப்பு என்று நம்மைக் குதூகலப்படுத்துகிறார் சுஷாந்த்.

அமீர்கான், ஷாரூக்கான் வகையறாக்களுக்கு முன்னரும் பின்னரும் பல ஹீரோக்கள் செய்த அதே சாக்லேட் ஹீரோ டெம்ப்ளேட்.

ஆனாலும், துடுக்குத்தனத்தை மீறி உணர்ச்சிவசப்படவும் தெரியும் என்று காட்டும்போது ஒரு நல்ல நடிகரை இழந்த சோகம் நம்மை தாக்குகிறது.

‘சிசோரே’ படத்திலும் இதேபோன்ற கதாபாத்திரம்தான் என்றாலும், அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு தனித்துவத்தை வெளிப்படுத்துவது அழகோ அழகு.

ஹீரோயின் சஞ்சனா சங்கி ஒரு பார்பி பொம்மை போலத் திரையில் தோன்றி, மெல்லச் சிரித்து அழுது குதூகலித்து காதலித்து ரசிகர்களைத் தன்வசப்படுத்துகிறார். ‘ஒன் டைம் வொண்டர்’ என்று முத்திரை குத்தப்படுவதற்கு முன்பாக, வெரைட்டியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்க வேண்டும்.

முயன்றால், நித்யா மேனன் போன்று ஜொலிக்கலாம்!

சுஷாந்தின் நண்பர் ஜேபியாக வரும் ஷகீல் வைத், தலைமை மருத்துவராக வரும் சுனித் டாண்டன், கிஸீயின் பெற்றோராக வரும் சாஸ்வதா முகர்ஜி மற்றும் ஸ்வஸ்திகா சாட்டர்ஜி, ரிக்‌ஷாகாரராக வந்து போகும் நபர் தவிர்த்து மற்றவர்களுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கிஸீயின் மேற்கு வங்க பின்னணியை ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்ட அளவுக்குக் கூட, இம்மானுவேலின் தமிழ்நாட்டு மண்வாசம் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

அபிமன்யூவாக வரும் சையீப் அலிகானின் கௌரவத் தோற்றம் க்ளிஷேவா, இல்லையா என்று குழம்பும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவர் வந்துபோகும் ஒரே ஒரு காட்சி.

கலைஞர்களின் உறுதுணை!

தில் பேச்சாரா என்று தொடங்கும் பாடலுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஃபாரா கான். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என தோன்றும் இப்பாடலின் பின்னே பெரும் உழைப்பு கொட்டிக் கிடக்கிறது.

திரைக்கதைக்குத் தகுந்தவாறு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அதேபோல, படத்தின் இன்னொரு பலம் சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவு.

ஆரிஃப் ஷெய்க்கின் படத்தொகுப்பு எளிமையாகவும் அழகாகவும் முடிந்தவரை படத்தை நேர்த்தியாக்கித் தந்திருக்கிறது.

‘தில் பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ எனும் ஆங்கில நாவலைத் தழுவியிருந்தாலும், ஷஷாங் கைதான், சுப்ரோதிம் சென்குப்தாவின் எழுத்து முடிந்தவரை திரையை விட்டு பார்வையை விலக்காமல் இருக்கச் செய்கிறது.

பார்க்கலாமா?!

சுஷாந்தின் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். ஆனால், அது மட்டுமே போதுமா என்றால் பதில் சொல்வது கடினம்.

வழக்கமான காதல் கதைகளில் முடிவு சுபமாக இருக்கும். இதில், அப்படியொரு முடிவு கிடையாது என்று சொல்லித்தான் படத்தையே தொடங்குகிறார் இயக்குநர் முகேஷ். ஆனாலும், படம் முடிந்த பின்னர் உங்கள் மனதில் சிறுதுளி கூட சோகம் ஒட்டியிராது.

‘சினிமா பாரடைசோ’ பாணியில் அமைந்திருக்கும் இப்படத்தின் கிளைமேக்ஸும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

காதலை சீரியசாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இது ஒரு மென்சித்திரம். ‘ஹேஹேஹே’ என்று கலாய்ப்பவர்களுக்கு இது ‘போர்’காவியம்.

உங்களைப் பற்றிய அனுமானம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து, இரண்டில் ஒன்றை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *