முகக் கவசம் அணியப்போவதில்லை என்று அடம்பிடித்த ட்ரம்ப் முகக் கவசம் அணிந்தார்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் ஆரம்பித்தது தொடக்கம் முதல் முறை பொதுவெளியில் முகக்கவசம் அணிந்துள்ளார்.

வொசிங்டனுக்கு வெளியில் இருக்கும் வோல்டர் ரீட் இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட ட்ரம்ப் காயமடைந்த படையினர் மற்றும் சுகாதார பராமரிப்புப் பணியாளர்களை சந்தித்தார்.
“முகக் கவசத்திற்கு ஒருபோதும் நான் எதிராக இருக்கவில்லை. ஆனால் அதற்கு நேரம் மற்றும் இடம் இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்” என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் முன் அவர் குறிப்பிட்டார்.
எனினும் தாம் முகக் கவசம் அணியப் போவதில்லை என்று முன்னர் குறிப்பிட்ட ட்ரம்ப், முகக் கவசம் அணியும் தமது போட்டியாளரான ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனை கேலி செய்தார்.

எனினும் தனது நிலைப்பாட்டை மாற்றி அவர் கூறியதாவது, “மருத்துவமனையில் இருக்கும்போது, குறிப்பிட்ட அமைப்பில், அதிக படையினர் மற்றும் பொதுமக்களிடம் பேசும்போது, சில நேரம் சத்திர சிகிச்சை அறைகளில் இருந்து வந்தவர்கள் இருக்கும் இடத்தில், முகக் கவசம் அணிவதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுவெளியில் நடமாடும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென்று அந்த நாட்டின் நோய்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தபோது, அதை தான் கடைபிடிக்கப்போவதில்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *