நிறைவேற்று அதிகாரத்துக்குச் சமாதி கட்ட ‘தேசிய ஜனநாயக முன்னணி’ உதயம்! – வெற்றிக்கொண்டாட்டத்தில் ரணில் அறிவிப்பு

“அரசியல் சதித் திட்டத்துக்கு நாம் முடிவு கட்டிவிட்டோம். இனி நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்காக தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளோம். அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படும். எங்களது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் புதிய அரசியல் கூட்டணிக்கான அனுமதி பெறப்படும்.”

– இவ்வாறு ஐ.தே.கவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று மாலை நடைபெற்ற ‘ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒக்டோபர் 26 ஆம் திகதியுடன் எல்லாம் முடிவடைந்துவிடும் எனச் சிலர் நினைத்தனர். ஆனால், மக்கள் சக்தி என்றால் என்னவென்பதை நாம் காட்டியுள்ளோம். பல சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தோம்.

இனிவரும் காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்கள் பக்கம் நின்று தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்காக அணிதிரண்ட கூட்டணி தொடர வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குங்கள்.

எப்போது தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

எமது கட்சியில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை எதிர்காலத்தில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எங்களுக்குப் பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள்தான் எங்கள் பலம்.

சிறுபான்மை அரசைக் கொண்டிருந்த ஹிட்லர், அன்று உலகப் போர் முடியாவிட்டால் பொதுத் தேர்தல்தான் வேண்டும் என்றிருப்பார். ஜனநாயகம் இங்கு மிளகாய்த்தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம். உயர்நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது.

அரசியல் சதித் திட்டத்தில் படுதோல்வியடைந்தவர்கள் இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டைப் பிரிப்பதாகக் கூறுகின்றனர். நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் ஏற்படுத்துவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *