உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீளக்கூட்டவே மாட்டார்

இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார்,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது எனவும், எதிரணியினர் உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனையும் பெறமாட்டார்கள் எனவும், அவர்களின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் திகதி தொடர்பில் உயர்நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் எக்காரணம் கொண்டும் பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மீளக்கூட்டவே மாட்டார் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆட்சியில் கூடுவது உறுதி எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையிடலின்போதே பிரதமர் மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“தோல்விகள் எமக்கு நிரந்தரமல்ல. வெற்றிகள்தான் எம்மை முன்னோக்கிக்கொண்டு செல்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமக்குக் கிடைத்த வெற்றி வரலாற்று வெற்றி; மாபெரும் வெற்றி. எனவே, பொதுத்தேர்தலிலும் கட்சியிலுள்ள அனைவரினதும் பங்களிப்பு மிகவும் அவசியம். அப்போதுதான் நாம் மாபெரும் வெற்றியுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்தலாம். மக்களின் நம்பிக்கையாளர்களாக நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும். எதிரணியினரின் வேண்டத்தகாத பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் எமது பணி தொடர்கின்றது. இதில் முப்படையினரினதும் பொலிஸாரினதும் மருத்துவத்துறையினரினதும் சேவைகள் அளப்பரியவை” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *