எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத்திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கடந்த 45 நாட்களுக்கு அதிகமான காலம் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் கூறினார். விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த மிகப்பெரிய வருமானம் இல்லாது போயுள்ளது. குறிப்பாக சுற்றுலாத்தறை பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. எனினும் இப்போது நாடு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கமைய விமான சேவைகளையும் வழமைக்கு கொண்டவர வேண்டும் என்ற காரணிகளை நாம் முன்வைத்துள்ளோம்.மீண்டும் விமான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் சுகாதார அதிகாரிகளுடன் பேசி ஒரு தீர்மானம் எடுக்கவுள்ளது.எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் வழமைக்கு கொண்டவரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.அதற்கான விதத்தில் இப்போதிருந்து விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகளை கண்காணிக்கும் மருத்துவ இயந்திரங்களை பொருத்துவது குறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் இலங்கை பயணிகள் அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் என சகலருக்கும் மருத்தவ பரிசோதனைகளை முன்னெடுப்பது குறித்தும், விமான பயணங்களில் சில சில மாற்று நேர அட்டவணைகளை கையாளவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *