பெருந்தோட்டங்கள்மீது இனியாவது உரிய கவனத்தை செலுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வேலுகுமார் எம்.பி. கோரிக்கை

பெருந்தோட்டத்துறைமீதும், அங்குவாழும் மக்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இனியாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் ( திருத்தச்) சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

2015 இல் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் மலையக மக்களுக்கு காணிஉரிமை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்திலும், அமைச்சரவை மட்டத்திலும் கொள்கைரீதியில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு , கம்பனிகளுக்கு உரிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு கண்டி மாவட்டம் உட்பட  மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் காணிகள் பகிரப்பட்டுவந்தன.

எனினும், கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி சூழ்ச்சிமூலம் ஆட்சிகவிழ்க்கப்பட்ட பிறகு பெருந்தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த திட்டங்கள் கிடப்பில்போடப்பட்டன.

இதனால், தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் தொடர்பில் அரச பெருந்தோட்டக்கம்பனிகளுக்கும், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் விடயதானத்துடன் தொடர்புடைய அமைச்சு அறிவுறுத்தில் விடுக்கவேணடும். எம்மால் மீண்டும் ஒருமுறை மேற்படி தரப்புகளுக்கு ஆரம்பம் முதல் கற்பிக்கமுடியாது.

குறிப்பாக  மக்கள் பெருந்தோட்ட சபை, அரச பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பிலான்டேசன் ஆகிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழுள்ள நிறுவனங்களே இதுவிடயத்தில் இழுத்தடிப்பு செய்துவருகின்றன.கண்டி, மாத்தளை ஆகிய மாவடடங்களில் இதை நேரில் காணலாம்.

மேற்படி நிறுவனங்களின் தலைவர்கள் அரசாங்கத்தாலேயே நியமிக்கப்படுகின்றனர். எனவே, அரசின் தீர்மானங்களை, கொள்கைகளை பின்பற்றுமாறு மேற்படி நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலின்போது பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும். இதுவிடயத்தில் அவர் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்.

எஞ்சியுள்ள காலப்பகுதியிலும் பெருந்தோட்டப்பகுதிகள்மீது கண்டும், காணாததுபோல் இருக்கானது தமது பதவிநிலைக்குரிய கடப்பாட்டை நிறைவேற்றவேண்டும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *