கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்

கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டு அவர் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி (antibody) உருவாகி இருந்தாலும் அவர் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகமாட்டார் என்ற ஆதாரபூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகளவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 2 இலட்சத்தைக் கடந்துள்ளது, பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்குகிறது.

மனித சமூகமே கொரோனாவால் மிரண்டு வீ்ட்டுக்குள் முடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை விரைவாகக் கண்டுபிடிக்கக் கோரி உலக நாடுகளை ஐ.நா சபையும் தொடர்ந்த வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு முழுமையாக அடங்குவதற்கு அங்குள்ள அரசுகள் பொருளாதார நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன.

விரைவாக லொக்டவுனை தளர்த்தினால் 2வது கட்ட கொரோனா அலையைச் சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே சில நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் அந்த பாதிப்புக்கு ஆளாகமாட்டார்கள் என்ற ரீதியில் நோய் எதிர்ப்பு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இந்த பாஸ்போர்ட் இருந்தால் மற்ற நாடுகளுக்கு பயணிப்பது, வேலைக்கு செல்வது எளிதாகும் என்ற ரீதியில் இதை ஆய்வு செய்து வருகின்றன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று விடுத்த எச்சரிக்கையில் ”கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திஉருவாகினால் மீண்டும் அவர் கொரோனாவில் பாதிக்கப்படமாட்டார் என்பதற்கு எந்த ஆதாரபூர்வ சான்றுகளும் இல்லை.

மீண்டவர் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனாவிலிருந்து காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

ஆனால் மக்களில் பெரும்பாலும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டுவிட்டால், உடலில் உருவான நோய் எதிர்ப்பு சக்தி மூலம் மீண்டும் கொரோனா வராமல் தடுக்க முடியும் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறானதாகும் .

ஏப்ரல் 20 ஆம் திகதிவரை நடத்தப்பட்ட எந்த ஆய்விலும் கொரோனாவில் ஒரு முறை பாதிக்கப்பட்டவர் மீண்டும் பாதிப்புக்குள்ளாக மாட்டார் என்பதற்கு சான்று இல்லை. கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது.

சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி சான்றிதழ் வழங்கி வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு அனுப்புவது ஆபத்தானது, வழங்குவதும் முறையல்ல, பயனும் இல்லை. அவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் “ என எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *