இலங்கையில் ஜுன் 20 இல் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு

2020 ஜுன் 20 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மார்ச் 27 ஆம் திகதி நீக்கப்பட்ட பின்னர், ஒரு வாரத்துக்குள் சாதாரணதொரு நிலை ஏற்படும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான திகதியை ஆணைக்குழு நிர்ணயித்திருந்தது.

எனினும், கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வேகமாக பரவக்கூடிய அபாய நிலை இருக்கின்றது. எனவே, தேர்தலை முன்னிட்டு சிறு அளவிலான கூட்டங்களைக்கூட நடத்துவதற்கான சூழ்நிலைகூட உருவாகவில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவேதான் தேர்தல் மேலும் பிற்போடப்படக்கூடும் என தெரியவருகின்றது.

ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்திருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப முடிவு மாற்றப்படும் என்ற தகவலையும் அண்மையில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 4 ஆம் திகதி புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *