கொரோனா அச்சத்தில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.

கொரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை அமுல்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அறிவுறுத்தல்கள்:

  1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
  2. முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
  3. முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும்.
  4. மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.
  5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்று நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  6. போர்வை, துவாய், பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *