வடக்கில் கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவவில்லை அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை

வடக்கில் கொரோனா தொற்று சமூகத்தில் பரவவில்லை. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி.

எனினும், ஊரடங்கு நிலவரம் மற்றும் கொரோனாவின் எதிர்காலம் பற்றி தெளிவாக கூற முடியாது. இது உலகளாவிய தொற்று நோய் என்றும் தெரிவித்தார்.

இன்று (15) யாழ் போதனா வைத்தியசாலையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

கொரோனா தொற்றில் அதிகமானவர்கள் தொற்றிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் நோய்க்காவிகளாக இருப்பார்கள். இதில் அவதானமாக எல்லோரும் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தல் முகாமில் இவர்கள் அடையாளம் காணப்பட்டதால் பிரச்சனையில்லை. ஆனால், சமூகத்தில் யாருக்காவது அறிகுறியில்லாமல் தொற்று ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவருக்கு பரவினால், மற்றவர்களிற்கும் பரவக்கூடிய நிலைமையுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஜனாதிபதி செயலணி முடிவுகளை எடுக்கிறது. எமது கருத்துக்களை கேட்கும்போது, நிலவரங்களை தெரிவிக்கிறோம்.

ஊரடங்கு பற்றி, நோயின் எதிர்காலம் பற்றி உடனடியாக கூறிவிட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இது உலகளாவிய தொற்று.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்று வடக்கில் – எமது சமூகத்தில் பரவவில்லையென்பது தெரிகிறது. என்றாலும், நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

பிசிஆர் பரிசோதனைக்கு தேவையான கிட்ஸ் ஓரளவிற்கு கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு மூன்று நாளுக்கு ஒருமுறை அவற்றை எமக்கு வழங்கி வருகிறதுஇ யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இயந்திரத்தின் மூலம் நாளொன்றுக்கு 72 பரிசோதனை செய்யலாம். விரைவில் யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள இயந்திரன் மூலமும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளொம். அங்கும் நாளொன்றுக்கு 72 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மையத்தில் மையத்தில் தொற்று ஏற்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது,

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை இராணுவமும், சுகாதார அமைச்சும் மேற்கொள்கிறார்கள். இது பற்றி என்னால் தெளிவாக கூற முடியா விட்டாலும், பாதிரியாருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆகையினால் வழியால் தொற்றிற்குள்ளானார்கள் என்பதை என்னால் தெளிவாக கூற முடியாது. ஆனால், அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவர் ஊடாக மற்றவர்களிற்கு தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *