பலவீனம் அடைகிறதா தமிழ் தேசியக் கூட்டமைப்பு

 

கூட்டமைப்பு மாற்று அணிக்கு பயப்படுகிறது. அதனால்தான் சம்பந்தர் இப்பொழுது அடிக்கடி ஐக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர் ஐக்கியம் என்று கருதுவது தமிழ் வாக்காளர்கள் ஒரு கொத்தாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

சுமந்திரன் தாங்கள் மாற்று அணிக்குப் பயப்படவில்லை என்று கூறுகிறார். அவர் மெய்யாகவே பயப்படுகிறார். அதனால்தான் பயம் இல்லை என்று கூறுகிறார். எனினும் அவர்கள் இல்லாத ஒன்றுக்கு பயப்படுகிறார்களா என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஏனெனில் மாற்று அணி என்று ஒன்று இன்னமும் பலமான ஒரு கூட்டாக மேலெழவில்லை. அது இப்பொழுதும் ஒரு நல்ல கனவாகவே காணப்படுகிறது. மாற்றுஅணி என்று அழைக்கப்படும் கட்சிகளுக்கிடையே இன்னமும் ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்படவில்லை.

அப்படியோர் ஐக்கிய முன்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணையுமா என்ற சந்தேகம் இப்பொழுதும் பலமாக உண்டு. விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரனை கைவிடத் தயாராக இருந்தால் சிலசமயம் கஜேந்திரகுமார் அவருடன் இணையக் கூடும். ஆனால் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரனைக் கைவிட்டாலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவரை கைவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எப். இன் வாக்கு வங்கி மோசமாகச் சரிந்து விட்டது. கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது அந்தச் சரிவைக் காணமுடிந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் அந்தக் கட்சி ஆனந்தசங்கரியின் சின்னத்தில் போட்டியிட்டு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

எனவே அந்தக் கட்சிக்கு அவசியம் ஐக்கியம் தேவை. விக்னேஸ்வரனுடன் இணைவதைத் தவிர அவர்களுக்குப் பிரகாசமான தெரிவுகள் குறைவு. எனவே விக்னேஸ்வரன் விரும்புகிறாரோ இல்லையோ ஈ.பி.ஆர்.எல்.எப். அவரைக் கைவிடாது. தவிர கஜேந்திரகுமார் இணைய மறுக்கும் ஒரு கூட்டணிக்குள் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இரண்டாம் நிலை தலைமைத்துவம் கிடைக்கும்.

விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள் இரண்டாம் நிலைத் தலைவர்கள் என்று பார்த்தால் சுரேஷ் பிரேமச்சந்திரன் துருத்திக் கொண்டு தெரியும் தலைவர்களில் ஒருவராவார். எனவே இது காரணமாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் விக்னேஸ்வரனின் கூட்டை விட்டு வெளியே வரமாட்டார். அவருக்கு அந்தக் கூட்டு அவசியம். அவருடைய அடுத்த கட்ட அரசியலுக்கு அந்த கூட்டை விட்டால் அவருக்கு வேறு வழி இல்லை.

தவிர விக்னேஸ்வரனிடம் பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை. அவருடைய கூட்டணிக்குள் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட கட்சி சுரேஷ் பிரேமச்சந்திரனுடையது மட்டும்தான். அதனாலேயே அவருக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனோடு தங்கு நிலை உண்டு. அவருடைய கட்சியை பதிவு செய்யும்வரை விக்னேஸ்வரனுக்கு பதிவு தொடர்பாக தங்கு நிலை உண்டு.

விக்னேஸ்வரன் இன்று வரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கட்சியின் தலைவர் தான். அப்படிப் பார்த்தால் தேர்தலில் அவர் ஒரு சுயேட்சைக் குழுவாகத்தான் போட்டியிடலாம். இப்படிப் பார்த்தல் மாற்று அணிக் கூட்டு எனப்படுவது அதிகபட்சம் சுயேட்சைக் குழுக்களின் கூட்டுத் தான்.

இந்தக் கூட்டுக்குள் இணையக் கூடும் என்று நம்பப்படும் ஏனைய தரப்புக்களில் ரெலோ இயக்கத்தின் சிவாஜிலிங்கம் ஸ்ரீகாந்தா அணியும் ஐங்கரநேசன் மற்றும் அனந்தியும் உண்டு. இவர்களில் ஐங்கரநேசனும் ஆனந்தியும் பதிவு செய்யப்படாத கட்சிகளை வைத்திருக்கிறார்கள். சிவாஜிலிங்கம்-ஸ்ரீகாந்தா தரப்பிடமும் கட்சிப்பதிவு இருப்பதாகத் தெரியவில்லை.

இங்கு பதிவு மட்டுமல்ல பிரச்சனை. வேறு பிரச்சினைகளும் உண்டு. விக்னேஸ்வரனோடு இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சிறிய கட்சிகளுக்குள் சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும்தான் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கட்சியைக் கொண்டிருக்கிறார். ஐங்கரநேசன், அனந்தி, ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இனிமேல்தான் தங்களுடைய கட்சிகளை நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது.

அவ்வாறுநிலை நிறுத்தினாலும் புதிய கட்சிகளும் தானும் சமம் இல்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கருதுவதாகத் தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் சவால்கள் ஏற்படும். அதுமட்டும்தான் சவால் என்பதில்லை. ஐங்கரநேசனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையே தொடர்பாடலில் இடைவெளிகள் இருப்பதாகத் தெரிகிறது. அதுபோலவே ஆனந்திக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையே தொடர்பாடல் இடைவெளிகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த இடைவெளிகள் காரணமாக விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள் இவர்கள் இருவரும் இணைவார்களா இல்லையா என்பது இப்பொழுது வரை நிச்சயிக்கப்படவில்லை.

மேற்கண்ட சவால்கள் எல்லாவற்றையும் வெற்றிகொண்டு ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்பினாலும் அது கூட்டமைப்புக்கு சவாலாக, அச்சுறுத்தலாக மேலெழுமா?

நாடாளுமன்றம் கலைக்கக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த தேர்தல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாளும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விக்னேஸ்வரனின் ஐக்கிய முன்னணி தொடர்பாக ஊகங்களும் அரசல்புரசலாக செய்திகளும்தான் உண்டு. அப்படியோர் ஐக்கிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் கையெழுத்திடப்படவில்லை.

இப்படிப்பட்டதோர் மாற்று அணி குறித்து பதற்றம் அடையும் நிலைமையில்தான் கூட்டமைப்பு காணப்படுகிறது. ஏனெனில் இம்முறை தன்னுடைய பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையக் கூடும் என்று அந்தக்கட்சி பதற்றம் அடைகிறது. அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகத் தெரிகின்றன.

விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். தவிர டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், விஜயகலா, மஸ்தான், ரிசாட் பதியுதீன் போன்றோர் வடக்கிலும் கிழக்கில் பிள்ளையானும் முஸ்லிம் கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கக் கூடும். குறிப்பாக வடக்கில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சியில் சந்திரகுமார் அணியும் வாக்குகளைப் பிரிக்கும்.

அந்த அணிக்கு இப்பொழுது உள்ள வாக்கு வங்கி சிறிதரனைத் தோற்கடிக்கப் போதாது. ஆனால் வரும் தேர்தலில் தலித் அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தேவையான வாக்கு வங்கியைத் திரட்ட சந்திரகுமார் முயற்சிப்பதாகத் தெரிகிறது. காரைநகரில் உள்ள தலித் அமைப்பு, வலிகாமம் மற்றும் வடமராட்சியில் உள்ள தலித் அமைப்புகள் போன்றவற்றை இணைத்து ஐக்கிய முன்னணியை அவர் உருவாக்கக் கூடும்.

ஏற்கனவே காரைநகரிலும் வலிகாமத்திலும் வடமராட்சியிலும் மேற்படி அமைப்புக்கள் சில உள்ளூராட்சி சபைகளில் ஆசனங்களை வென்றிருக்கின்றன. எனவே தெட்டம் தெட்டமாக காணப்படும் மேற்படி அமைப்புகளை ஒன்று திரட்டி ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்க சந்திரகுமார் முயற்சிப்பதாகத் தெரிகிறது. எனினும் அவருடைய கட்சிக்கும் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் பதிவு இல்லை.

அவருடைய கட்சியானது பெருமளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு வங்கியைத்தான் பிரிக்கக் கூடும். இதனால் தேவானந்தாவின் வெற்றி வாய்ப்புக்கள் குறையக்கூடும் என்றும் ஓர் அவதானிப்பு உண்டு. இவ்வாறானதோர் பின்னணிக்குள் குறிப்பாக வடக்கில் கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோகத்துக்கு சவால்கள் ஏற்படக்கூடும் என்பதனை அக்கட்சியின் தலைவர்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால்தான் மாற்று அணி குறித்து அவர்கள் பதற்றம் அடைகிறார்கள். இதுதவிர சம்பந்தருக்கும் வயதாகிவிட்டது. அவருக்கு அடுத்தக்கட்ட தலைமை என்று பார்த்தால் மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் உண்டு. மாவை சேனாதிராஜாவிற்கு தலைமைத்துவப் பண்பு இல்லை என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இந்நிலையில் மூப்பின் அடிப்படையில் அவர் தலைவராக வந்தால் நடைமுறைத் தலைவராக சுமந்திரன் இருப்பார். சுமந்திரனில் தங்கியிருக்க வேண்டிய தேவை மாவைக்கு உண்டு. ஒப்பீட்டளவில் சுமந்திரன் மாவையை விடவும் தலைமைத்துவப் பண்பு அதிகம் உடையவராகக் காணப்படுகிறார். எனவே சம்பந்தருக்குப் பின் சுமந்திரனே நடைமுறைத் தலைவராக இருப்பார்.

கட்சிக்குள் அவருக்கு போட்டியிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீதரன் போன்றவர்கள் பேசும் தேசியவாதத்துக்கும் சுமந்திரனுக்கும் ஒத்து வராது. தவிர கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு அரசியலை விட்டால் வேறு வழியில்லை. அப்படி ஓர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க சுமந்திரனால் முடியுமா?

இது விடயத்தில் அவருக்குக் கீழ் இருக்கும் ஸ்ரீதரன் போன்றவர்களின் எதிர்ப்பு அரசியலில் அவர் தங்கியிருக்க வேண்டியிருக்கும். எனினும் சம்பந்தருக்குப் பின் உடனடிக்கு நடைமுறைத் தலைவராக சுமந்திரனே வரக்கூடிய ஒரு கட்சிச் சூழல்தான் அங்கு காணப்படுகிறது.

சுமந்திரனின் தலைமையில் ஒரு கவர்ச்சியான எதிர்ப்பு அரசியலை அக்கட்சியால் முன்னெடுக்க முடியுமா? இக்கேள்விக்குப் பதிலாக மற்றொரு கேள்வியை கேட்கலாம், கடந்த பத்தாண்டுகளாக சம்பந்தர் மட்டும் எப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்? ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இருந்த நிலைமை இப்பொழுது இல்லை.

கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைக்கக் கூடிய அளவுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனின் கூட்டணி போன்றன காணப்படுகின்றன. இக்கூட்டணிகள் பிரம்மாண்டமான வெற்றியைக் குவிக்கா விட்டாலும் பிரிக்கப் போவது கூட்டமைப்பின் வாக்கு வங்கியைத்தான்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் கூட்டமைப்பும் பலமாக இல்லை எதிரணியும் பலமாக இல்லை. அதனால் தமிழ் பேரம் குறையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *