தெரிவுக்குழு விசாரணை வேண்டாம் என மைத்திரி போர்க்கொடி; ரணில் அணி விடாப்பிடி! – அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் சொற்போர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் சொற்போர் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இனி வரமாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார்.

தெரிவுக்குழுவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனித் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு விசாரணை வேண்டாம் என சபாநாயருக்குத் தான் முன்னரே அறிவித்திருந்த போதிலும் அவர் சபைக்கு அறிவிக்கவில்லை எனக் கடும் சீற்றத்துடன் தெரிவித்த ஜனாதிபதி, சேவையில் இருந்து விலக்கப்பட்ட அதிகாரிகளே தெரிவுக்குழு முன் சாட்சியமளித்தனர் எனவும், பதவியில் இருக்கும் எவரும் இனி சாட்சியமளிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள், புலனாய்வுத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளைத் தன் மீது சுமத்த சிலர் முயல்வதாகவும் ஜனாதிபதி சாடினார்.

இன்றைய கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பல அமைச்சர்கள் கடும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களினால் ஆத்திரமடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்கள் பலரும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் இடம்பெறும் தெரிவுக்குழு விசாரணையை இடைநிறுத்த முடியாது எனவும், தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய தெரிவுக்குழு விசாரணையே சிறந்தது எனவும் வாதிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *