இலங்கை மக்களுக்கு மாற்றம் தேவை அதை மாற்றப் போவது யாரு?

மாற்றம் தேவை! மாற்றுவது யார் ?

கடந்த 70 ஆண்டுகளில், தமிழர்கள் தமது நியாயங்களை முன்வைத்து, அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியும் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைச் செய்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை; எல்லாம் எட்டாக்கனிகளாகவே காணப்படுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளில், வடக்கு, கிழக்கில் தமிழர் ஆயுத பலத்துடன் இருந்த வேளையில், சமஸ்டித் தீர்வுக்குச் சம்மதித்த இலங்கை அரசாங்கம், அது தொடர்பாகப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருந்தது.

பண்டா – செல்வா ஒப்பந்தம், பின்னர், திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை-இந்திய ஒப்பந்தம், சந்திரிகா – புலிகள் ஒப்பந்தம், ரணில் – பிரபா ஒப்பந்தம் என, உள்ளூரிலும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையின் மத்தியிலும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

இருந்தபோதும், ஏட்டிக்குப் போட்டியான புரிந்துணர்வின்மை, காலம் தாழ்த்துதல், தீர்வை வழங்குவதற்கு உண்மையான மனமின்மை போன்றவை மூலம் ஒப்பந்தங்கள் செல்லாக்காசாகின.

இதன் விளைவுகள், சொர்க்கபுரியாகத் திகழ வேண்டிய இலங்கையை இழப்புகளும் பயங்கரமும் நிறைந்த நாடாக உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தின. இந்தக் கொடூர போர்ச் சூழலின் துயர்களை, இலங்கைத் தீவின் மக்கள் அனைவரும் அனுபவித்தனர்.

இனக்கலவரங்கள், இயக்க மோதல்கள், சந்தேகப் படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் என, அடிப்படை உரிமை மீறல்கள் பல குதூகலத்துடன் அரங்கேற்றப்பட்டன.

தொடர் குண்டு வெடிப்புகள், ஆயுத மோதல்கள் என்பன உக்கிரம் பெற்றிருந்த தேசம், அமைதிப் பூங்காவாக, ஆயுதம் ஒழிக்கப்பட்ட தேசமாக மாறிவிடும் என, இலங்கைக் குடிமக்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், தமிழ் பேசும் மக்களின் மனங்களில் அமைதியையும் சக வாழ்வையும் சமாதானத்தையும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. போரையும் அதைத் தொடர்ந்த குரோத உணர்வுகளும் மேலோங்கிக் காணப்படும் தன்மையே துருத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலைவரங்கள், இலங்கையின் அபிவிருத்தியையும் தொழில்வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் இன்னும் ஒருபடி சீர்குலைத்து விட்டன. தேசத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் பற்றிய சிந்தனைகள், கானல் நீராகவே காணப்படுகின்றன.

இத்தகையதொரு சூழலில், பொருளாதார வளர்ச்சி இன்றிக் காணப்படும் இலங்கை, அபிவிருத்தியின் பெயராலும் போரின் விளைவுகளாலும் தாங்கொணாக் கடன் சுமையைத் தாங்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டது.

அர்ப்பணிப்புடன் நாட்டின் வளர்ச்சிக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள், சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்தும் சூழ்நிலைக்கு வந்துவிட்டன.

“எமது தாய் திருநாட்டை, மலேசியா போலும் சிங்கப்பூர் போலும் கட்டி எழுப்புவோம்” என்ற வீரதீரப் பேச்சுகள் அனைத்தும் வெட்டிப் பேச்சுகளாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய சுதந்திரம் என்பதும் இத்தீவின் மக்களது சுதந்திரம் என்பதும் அவர்களது உரிமை; பல்லினப் பண்பாட்டு விழுமியங்களையும் சகவாழ்வையும் அமைதி சமாதானத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இத்தீவில் வாழும் சகல இன மக்களும் அனுபவிப்பதற்குரிய வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

1972இல் எழுதப்பட்ட இலங்கைக் குடியரசின் முதலாவது அரசமைப்பினுடையதும் 78 ஆம் ஆண்டின் அரசமைப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பவை போல் எதுவும் நடைபெறவில்லை.

மக்களுக்குரிய சட்ட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், நடைமுறையில் அனுபவிப்பவர்களுக்கே அதுவும் சட்டத்தையும் அதன் விளக்கங்களையும் சரிவரப் புரிந்து கொண்டவர்களுக்கு அது, சரியாகப் புரியும்.

ஆயினும், இலங்கையில் வாழும் மக்களில் எத்தனை சதவீதமான மக்கள், இலங்கை அரசமைப்பை முழுமையாக விளங்கி இருக்கிறார்கள். இலங்கையின் அரசமைப்புத் தொடர்பான பூரண அறிவு, அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எந்த அளவு விளங்கியிருக்கிறது என்பதெல்லாம் இன்றைய இலங்கைத் தீவின், அரசியல் ஜனநாயக நடைமுறைகளை அலசிப் பார்க்கும் ஒவ்வோர் அறிவு ஜீவிக்குமே விளங்கும்.

இத்தகைய நிலைமையில், இலங்கையில் வாழும் 70 சதவீதமான சிங்கள மக்களும் 30 சதவீதமான இலங்கைச் சிறுபான்மைச் சமூகமும் இதனுடைய பரப்பை எவ்வாறு விளங்கிக் கொண்டிருக்கின்றன.

மாகாண ஆட்சி முறைமை, அடிப்படை உரிமைகள், மதச்சுதந்திரம், அரச கரும மொழி, ஆட்சிமன்ற அதிகாரங்கள், நீதித்துறை, நிதித்துறை அதிகாரங்கள் தொடர்பான விளக்கங்களைச் சரிவர புரிவதற்கும், விகிதாசாரத் தேர்தல் முறைமை, மக்கள் அபிப்பிராயங்கள், வாக்கெடுப்பு உரிமைகள் தொடர்பாகவும் இடப்பட்டுள்ள நுட்பங்கள், பண்டை சமூகத்தினர் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என அனுமதித்துள்ள போதும், ஆட்சியாளர்களால் இவை தட்டிக் கழிக்கப்படுவதுடன் சட்டங்கள் துஷ்பிரயோகமும் செய்யப்படுகின்றன.

இலங்கையின் சட்ட முறைமைகள் பற்றிய அறிவு குறைவு காரணமாகவே, இங்கு வாழும் பன்முக சமூகங்கள், சின்னாபின்னமாக்கப்பட்டு உள்ளன.

சட்டத்துக்கு விரோதமான முறைமையில் இனவாதம், பிரதேசவாதம், சாதியம் என்பன தங்கள் சுயநலன்களுக்காக அள்ளி வீசப்படுகின்றன.

இதன் காரணமாக, இலங்கைத் தீவின் அப்பாவி மக்கள், உணர்வு எழுச்சியில் உசுப்பேற்றப்பட்டு, மிக மோசமான வன்முறையாளர்களாகக் காலத்துக்குக் காலம் வௌிப்படுகின்றார்கள். இலங்கையின் பல்லினச் சமூகங்களைப் பிரித்தாளும் கைங்கரியத்தை, மிகச் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்தகைய நீதி விரோதமான போக்கு, இலங்கையின் சுபீட்சமான எதிர்காலத்துக்குச் சாவுமணி அடிப்பதாக உள்ளது. ‘நாம் இலங்கையர்’ என்ற உணர்வும் சிந்தனையும் இலங்கை மக்களுக்குரிய பண்பாடுகளும் சிதைவுறும் படியான நடத்தைக் கோலங்கள், தற்போது மேற்கிளம்பி இருக்கின்றன.

இதன் காரணமாக, இலங்கை மக்கள் தங்கள் பன்முகக் கலாசாரத்தை விளக்கவும் பரஸ்பர நம்பிக்கை இரங்கலுடன் பழகவும் அடிப்படையாக அமைந்துள்ளன.

இலங்கைத்தீவின் பௌத்தத்தையும் அதற்கு இணையாகப் போற்றக்கூடிய ஏனைய மதங்களையும் அனுஷ்டிக்கும் மக்கள், இம்மதங்கள் சொன்ன வழிநின்று, முரண்பட்ட பாதைக்குச் செல்லாது, வழிகாட்டிகளாக இருக்க வேண்டியது, இத்தீவின் அரசியல்வாதிகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இலங்கையின் ஆட்சி அதிகாரங்கள், பன்முக சமூகத்தைக் குறித்துடையதாக இருந்தாலும் அதிகார வர்க்கத்தால் அது பிரித்தாளபட்டுள்ளதே இன்றைய பிரச்சினை.

இந்தப் பிரித்தாளும் தந்திரம், உபாயங்கள் இலங்கைத்தீவில் வாழும் மக்களால், புரிந்துணர்வோடு முறியடிக்க முன்வரும்போது தான், உண்மையான ஜனநாயகம் பிறக்கும்; இலங்கை அரசமைப்பின்படி சகலருக்கும் சம உரிமை கிடைக்கும், இத்தீவில் சௌஜன்னியத்தையும் சக வாழ்வையும் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும். ஊழலற்ற சமூகத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் நல்லாட்சியையும் கட்டியெழுப்ப முடியும்.

எனவே மாற்றம் தேவை! மாற்றுவது யார் அரசியல்வாதிகளின் பின் செல்வதா? அல்லது மாற்றத்தை நோக்கிச் சிந்திப்பதா? இதுவே, இலங்கையில் வாழும் சகல மக்கள் முன்னும் இருக்கின்ற வினாவாகும். சிந்தித்துச் செயல்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *