முஸ்லிம் காங்கிரஸ் சரிவை நோக்கி செல்கிறதா?

 1. மு.காவின் கட்டமைப்பு, கட்டுக் குலைந்ததால், பல ஊர்களில் இரண்டு அணிகள்,

  சரியான அடித்தளமும் கட்டுமானமும், அதேபோன்று உரிய பராமரிப்பும் இல்லாத கட்டடங்கள், அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடுவது உலக இயற்கை.

  அதைப்போலவே, முறையான கட்டமைப்பும் ஒழுங்கும் இல்லாத அரசியல் கட்சிகளும், சவால்மிக்க காலங்களில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், தள்ளாடுவதைக் காண முடிகின்றது. பிரதான முஸ்லிம் கட்சிகளில், இந்நிலைமை வெகுவாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள், அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பு, கடந்த பல வருடங்களுக்குள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகிப் போயிருக்கின்றது.

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள், முறையான அடிப்படையில் ஒரு கட்டமைப்பு, திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஒரு வகையில், உருவாக்கப்பட்ட கட்டமைப்பும், கட்டுக்கோப்பு இல்லாமல் போயிருக்கின்றது.

  முஸ்லிம் சமூகத்தை மய்யமாகக் கொண்டு செயற்படும் ஏனைய கட்சிகள், அரசியல் அணிகளில் கூட, 90களில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்த அளவுக்கு, சிறந்த கட்டமைப்பையும் கட்டுக்கோப்பையும் காணக் கிடைக்கவில்லை. முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல், இன்னும் ‘வயதுக்கு வராமல்’ இருப்பதற்கு இதுவும் ஓர் அடிப்படைக் காரணம் ஆகும்.

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, எம்.எச்.எம். அஷ்ரபும் அவரோடு அன்றிருந்த அரசியல் முன்னோடிகளும் உருவாக்கிய போது, அதற்கு உயரிய நோக்கம் இருந்தது.

  முஸ்லிம் இளைஞர்கள், ஆயுத இயக்கங்களை நாடிச் செல்வதைத் தடுத்து, அவர்களை அரசியல் மயப்படுத்தி, நல்வழிப்படுத்துவதும் தனித்துவ அடையாள அரசியல் முன்னெடுப்பின் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதும் அந்த நோக்கங்கள் எனலாம்.

  வெறுமனே பணம் உழைப்பதற்காகவோ, பட்டம் பதவிகளில் இருந்து கொண்டு சுக போகங்களை அனுபவிப்பதற்காகவோ, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை.

  இது மக்களுக்கான அரசியல் இயக்கமாக இருக்க வேண்டும் என்று, அஷ்ரபும் கட்சியின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸதீன் போன்றவர்களும் ஸ்தாபகத் தலைவரின் வலது, இடது கரங்களாக அன்றிருந்த பெயர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசியல் ஆளுமைகளும் நினைத்தனர்.

  யுத்தமேகம் சூழ்ந்திருந்த காலப் பகுதியில், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகள், கிழக்கு மாகாணத்தில் அதிகரித்திருந்தமை; வேலை வாய்ப்பில்லாத பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் உணர்வுத் தூண்டுதலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தமை; தமக்கு ஓர் அரசியல் கட்சி அவசியம் என்று முஸ்லிம் சமூகம் நினைத்தமை போன்ற காரணங்கள், முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குள் வியாபிப்பதற்கு ஏதுவான களத்தை, ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறலாம்.

  இந்தப் பின்புலத்தில், கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஒவ்வோர் ஊருக்கும், வீட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் மத்திய குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

  மத்திய குழு உறுப்பினர்கள், கிட்டத்தட்ட இன்றிருக்கின்ற கிராம அலுவலர் போல செயற்பட்டதாகச் சொல்ல முடியும். அதற்கான தேவைப்பாடுகளும் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்தது. மத்திய குழு, மாவட்டக் குழு என்று அப்படியே கட்சியின் உயர்பீடம் வரை, இந்தக் கட்டமைப்பு இருந்தது.

  மத்திய குழுக்கள்தான், கட்சியின் அடித்தளமாக இயங்கிய காலமது. ஓர் ஊரில், கட்சித் தலைவரால், ஒரு தொழில் நியமனத்தை வழங்குவது என்றால் கூட, மத்திய குழுவின் ஆசீர்வாதமும் ஒப்புதலும் பெறப்பட்டது.

  கட்சியில் ஒழுக்கத்தை மீறியவர்கள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டதையும் நாம் மறந்து விடக் கூடாது. அந்தளவுக்கு கட்டுப்பாடு இருந்தது.

  அஷ்ரப், கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்களை மனதில் பதித்து வைத்திருந்ததாகச் சொல்வார்கள். அவர் வீடு தேடிச் சென்று, தொழில்களை வழங்கினார்; அபிவிருத்திகளைச் செய்தார். அவர், முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்காக முன்னின்றவர் என்றாலும் தமிழ், சிங்கள இளைஞர்களுக்கும் தொழில் வழங்கினார்.

  பிற்காலத்தில், தான் பலம்மிக்க அமைச்சராகி, கட்சி பெரு வளர்ச்சி பெற்று விட்டது என்பதற்காக, பிரதேச ரீதியான மத்திய குழுக்களைக் கலைத்து விடவில்லை. அவற்றை மிகவும் வினைத்திறனோடு இயங்கச் செய்தார்.

  ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர், எல்லாம் மாறிப் போய்விட்டன. அதற்குப் பிறகு, தலைவராகப் பொறுப்பேற்ற ரவூப் ஹக்கீமின் அணுகுமுறை, அவரை, இரண்டாம்நிலைத் தலைவர்கள் வழிப்படுத்துவதில் விட்ட தவறுகள், இக்கட்சியை, ஓரிருவரை மய்யமாகக் கொண்ட கட்சியாக மாற்றி விட்டிருக்கின்றது எனலாம். இந்தப் பின்னணியில், கட்சிக் கட்டமைப்பு சீர்குலைந்து போனது.

  முன்னைய காலங்களில், ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பலம்மிக்கதொரு மத்தியகுழு இருந்தது. இதை அடித்தளமாகக் கொண்டு, கட்சி கட்டமைக்கப்பட்டிருந்தது.

  ஆனால், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு, மெதுமெதுவாக அந்நிலைமை மாறியது. பல ஊர்களில் மத்திய குழுக்கள் பிளவுபட்டன. உண்மைப் போராளிகள் அல்லாமல், வெறுமனே பம்மாத்துக் காட்டுகின்ற ஆட்களுக்கும் மத்திய குழுவில் இடம் வழங்கப்பட்டது. சில மூத்த அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

  மத்திய குழு என்ற அடிநாதம், சீர்கெட்டுப் போனதால், மேலுள்ள அடுக்குகளில் இருந்த பதவிக் கட்டமைப்புகளும் ஆடிப்போயின. கட்சிக்குள் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்கின்ற நடைமுறையும் தூர்ந்துபோனது. ஒருவரை நோக்கி, மற்றவர் விரல் நீட்டியதால், யார் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது என்ற சிக்கல் உருவானது.

  இவ்வாறாக, மு.காவின் கட்டமைப்பு, கட்டுக் குலைந்ததால், பல ஊர்களில் இரண்டு அணிகள், அக்கட்சிக்குள்ளேயே உருவாகியுள்ளன. இதைச் சீர்படுத்தி, கட்டமைப்பை மறுசீரமைக்க, தலைவர் ரவூப் ஹக்கீமோ பிரதித் தலைவர்களோ, செயலாளரோ காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனாலும், இன்னும் பெயரளவிலாவது மத்திய குழுக்கள் இருக்கின்றன.

  இந்தப் போக்கு, முஸ்லிம் காங்கிரஸை, ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்குப் பெரும்பாடுபட வேண்டிய நிலைமைக்குள் தள்ளியுள்ளது. கட்சிப் பாடல்களையும் உணர்ச்சிப் பேச்சுகளையும் நம்பி, அரசியல் செய்யாமல், சரியாகக் கட்சிக் கட்டமைப்பைப் பேணி, மக்கள் சார்பு அரசியலில் இறங்கியிருந்தால் மு.காவுக்கு, தேர்தல்கள் இவ்வளவு சவாலானவையாக இருந்திருக்காது.

  இதேவேளை, அடுத்த முஸ்லிம் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும் கட்சியின் கட்டமைப்பு, முறையானதாக இல்லை. இதனால், கட்சிக்குள், ‘கம்பெடுத்தவர் எல்லாம் வேட்டைக்காரராக’ வருவதற்கு முயற்சிக்கின்ற பாங்கிலான போக்குகளை அவதானிக்க முடிகின்றது.

  முஸ்லிம் காங்கிரஸில், அஷ்ரப் காலத்தில் இருந்த கட்டமைப்புத்தான் பின்னர் சீர்குலைந்தது. அதாவது இருந்தது; பின்னர் இல்லாமல் போனது.

  ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தமட்டில், அக்கட்சி ரிஷாட் பதியுதீன் என்ற தனிப்பட்ட அரசியல்வாதியாலும் அவரோடு இருந்தவர்களின் முயற்சியாலும் உருவாக்கப்பட்டதாகும். இருப்பினும், முறையான கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதே, இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

  கட்சியின் வளர்ச்சியில் பெரும் பங்கை, ரிஷாட் பதியுதீன் வகிக்கின்றார் என்று சொல்ல முடியும். அவருடைய, அரசியல் போக்குத்தான், அக்கட்சி இன்று இந்தளவுக்கு வியாபித்திருப்பதற்கு காரணமாகும்.

  தவிர, அக்கட்சியில் இருக்கின்ற ‘முக்கிய’ அரசியல்வாதிகளில் அநேகர், மக்கள் சேவையை விட்டும் தூரமாகவே இருக்கின்றனர். அதனால், கட்சி வளர்ச்சியில் சொற்பமான பங்களிப்பையே இவ்வாறானவர்கள் வழங்கியதாகக் கருத முடிகின்றது.

  ரிஷாட்டால் அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதாலும், அக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கோலோச்சிக் கொண்டிருந்ததுடன் ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற, மாற்று அரசியல் அணிகளும் பலமான நிலையில் இருந்தமையாலும், (அஷ்ரப் மு.காவுக்கு உருவாக்கியதைப் போல) சிறந்ததொரு கட்சிக் கட்டமைப்பை, மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்க அவகாசம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். வடமாகாணத்தில் கட்சிக்கு பிரதேச வாரியாக, ஓரளவுக்கு மத்திய குழுக்களுக்கு நிகரான ஒரு கட்டமைப்புக் காணப்பட்டாலும், கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வாறான நிலை இருக்கவில்லை.

  2010ஆம் ஆண்டு வரை, ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் பெரியளவில் கூட எடுக்கப்படவில்லை என்பதால், மக்கள் காங்கிரஸ் களமிறங்காத பிரதேசங்களில் உறுதிமிக்க ஒரு கீழ்மட்ட கட்டமைப்பு, அவர்களுக்கு அத்தியாவசியமானதாகத் தோன்றியிருக்காது.

  இணைப்பதிகாரிகள், அமைப்பாளர்கள், தெரிந்த நபர்கள், அரசியல் பற்றி அறவே தெரியாதவர்களாக இருந்து கொண்டு, தம்மை உள்ளூர் அரசியல் புள்ளியாக, ரிஷாட் பதியுதீனுக்குக் காட்டியர்கள், தொடர்பிலிருந்த நபர்கள் போன்றவர்களே, பல பிரதேசங்களில், மக்கள் காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்களாக இருந்தனர். இவர்களை வைத்தே, கட்சியும் தனது முன்னகர்வுகளைச் செய்தது.

  இருப்பினும், அதற்குப் பிறகு, கடந்த சில வருடங்களுக்குள் மக்கள் காங்கிரஸ் கணிசமானதொரு வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

  இந்நிலையில், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிராந்தியங்களில் கட்சி போட்டியிட்டமையால், கட்சிக்கு ஏதோவொரு கட்டமைப்பு 2015 முதல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

  ஆனாலும், அது இன்னும் முறையாக கட்டமைக்கப்படவில்லை; “பிரதேச வாரியாக, மாவட்ட ரீதியாக, தேசிய மட்டத்தில் முறையான கட்சிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்று, தலைவர் ரிஷாட், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகின்றார். அத்துடன் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதாகத் தெரிகின்றது.

  ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் உள்ளகக் கட்டமைப்பை மறுசீரமைக்க, யாரும் விரும்புகின்றார்கள் இல்லை என்பது போலவே, மக்கள் காங்கிரஸுக்குள்ளும் பலமான அதேநேரம் முறைமையான ஒரு கட்சிக் கட்டமைப்பை பிரதேச, மாவட்ட ரீதியாக உருவாக்க யாரோ அல்லது எதுவோ தடையாக இருப்பதாகத் தோன்றுகின்றது. குறிப்பாக, தமது கையில் ‘பிடியை வைத்திருக்க’ ஒருசிலர் முனைவதாகவும் ஒரு கருத்திருக்கின்றது.

  மு.காவைப் போலவே, மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இப்போது பிரதேச வாரியாக இரண்டு அணிகள் தோற்றம் பெற்று வருகின்றன. கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில், இந்த நிலைமைகளை அதிகம் அவதானிக்க முடிகின்றது. ஓர் ஊரில், இரண்டு அணிகள் தனித்தனியாகக் கூட்டம் நடத்துவது, இதைப் பகிரங்கமாக்குகின்றது.

  அதேபோன்று, கட்சிக்குள் முறையான கட்டமைப்பை உருவாக்குவதன் ஓர் அங்கமாக, கடந்த வாரம் தலைவர் ரிஷாட் தலைமையில், அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முரண்பாடுகள் வெளிப்பட்டதாக அறிய முடிகின்றது.

  அது உண்மையென்றால், ஊர் வாரியாக, உட்கட்சிப் பிரிவுகள் இருப்பதை மட்டுமன்றி, கட்சிக்குள் கட்டமைப்பும் கட்டுக்கோப்பும் வளர்க்கப்படவில்லை என்பதைக் குறிப்புணர்த்துவதாகவே அமைகின்றது.

  முஸ்லிம் காங்கிரஸ் என்றாலும் சரி, மக்கள் காங்கிரஸ் என்றாலும் சரி அல்லது தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போன்ற இதர முஸ்லிம் கட்சிகளாக இருந்தாலும் சரி, உட்கட்சி முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

  ஊர்களுக்குள் இருந்த அணிகளை, மர்ஹூம் அஷ்ரப் சமரசம் செய்து வைத்ததைப் போல, பிரதேசவாரியாகப் பிரிந்து செயற்படுவோரை ஓரணியில் சேர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் மேற்கொண்ட கையோடு, கட்சிகளுக்குள் சிறந்ததொரு கட்டமைப்பையும் கட்டுக் கோப்பையும் கட்டமைக்க வேண்டும். இதன்மூலம், மக்கள் சார்பு அரசியலை மேற்கொள்வதானது, மிக இலகுவாக, நீண்டகாலம் அரசியலில் நிலைத்திருப்பதற்கான‌ அடிப்படை நிபந்தனையாகும்.

  புத்திஜீவிகள் உள்வாங்கப்படுதல் அவசியம்

  கல்வி அறிவில்லாத பலருக்கு ‘அரசியல்வாதி’ என்ற பதவியும் அரசியல் அதிகாரமும் கிடைத்திருக்கின்றது. புத்திஜீவிகள் பலரை இந்த அரசியல் களம் கண்டுகொள்ளாமலும் விட்டிருக்கின்றது.

  நமக்குத் தெரிந்த இலங்கை அரசியலில், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரம் கூட சித்தியடையாத எத்தனையோ பேர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றில், அரசியலை சாக்கடை என்று எண்ணி ஒதுங்கி இருக்கின்றனர். அல்லது, அரசியல் போட்டியில் தோற்றுப் போகின்றவர்களாக இருப்பதைத் தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம்.

  இந்த நிலை ஓரளவுக்கேனும் மாறுவதற்கு தேசியப்பட்டியல் எம்.பி முறைமை வழிகோலும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதும், பிற்காலத்தில் அந்த எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றமாக மாறியது.

  எது எவ்வாறிருப்பினும், இலங்கை அரசியலில் இது விடயத்தில் புரட்சிகர மாற்றமொன்றை நிகழ்த்த வேண்டியிருக்கின்றது.

  அரசியல் கட்சித் தலைமைகள் அதிலும் குறிப்பாக, முஸ்லிம் தலைவர்கள் தம்மோடு புத்திசாலிகளை, படித்தவர்களை கட்சிக்குள் வைத்திருப்பதற்கு பின்வாங்குவதான ஒரு தோற்றப்பாட்டை அவதானிகள் உற்று நோக்கியுள்ளனர்.

  பெரும்பாலும் ‘ஆமா சாமிகளே’ அரசியல்வாதிகளுக்குப் பிரியமானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

  எல்லா விடயங்களையும் விமர்சன ரீதியாக நோக்குகின்றவன், தட்டிக் கேட்கின்றவன், அறிவாளி, துறைசார்ந்த வல்லுநர்களை அரசியல் விவகாரங்களில் தமக்குப் பக்கத்தில் வைத்திருக்க அரசியல் தலைமைகள் பெரிதும் விரும்புவதில்லை.

  அவர்களைக் கையாள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கலும் தர்மசங்கடமும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்களாகும்.

  நடைமுறை அரசியலுக்காக அல்லது சுய இலாபத்துக்காக ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுக்கின்ற போது, கட்சியில் விடயமறிந்த, படித்தவர்கள் இருப்பாராயின் அவர்களுக்கு நியாயம் கற்பிப்பதானது கீழ்மட்ட மக்களை ஏமாற்றுவது போல, இலகுவான காரியமல்ல. இதுவும் தலைவர்களுக்கு ஒரு தலையிடியாகும்.

  ஆனால் பொதுவெளியில் இதுபற்றி வினவப்படுகின்ற போது, “அவன் அதிகம் படித்தவன், அவனைக் கட்டுப்படுத்த இயலாது, நாம் சொல்வதைக் கேட்க மாட்டான்” என்று பல காரணங்கள் இதற்குச் சொல்லப்படுவதுண்டு. இதில் உண்மை இல்லாமலும் இல்லை.

  நமது நாட்டில், எத்தனை முஸ்லிம் புத்திஜீவிகள், படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். ஆனால் இவர்களுள் பலர், பொது விடயங்களிலோ, அரசியல் விவகாரங்களிலோ ஈடுபாடு காட்டுவது கிடையாது.

  இப்போதிருக்கின்ற அரசியல் கலாசாரத்தை முற்றாக வெறுப்பதாகவும் அது தமக்குப் பொருத்தமற்றது என்றும் சொல்கின்ற இத்தகையர்களில் அநேகர், தத்தமது தொழிலிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துகின்றனர்.

  தொழில் முன்னேற்றமும், செல்வத்தைச் சம்பாதிப்பதுமே கணிசமானோருக்கு இலக்காக இருக்கின்றது. ஒரு சிலருக்கு, கொழுத்த சீதனம் வாங்குவதோடு எல்லாம் முடிவுக்கு வந்துவிடுகின்றது.

  உண்மையில், படித்தவர்கள் எல்லாரும் அறிவாளிகளும் இல்லை; புத்திஜீவிகளும் இல்லை; சமூக செயற்பாட்டாளர்களும் இல்லை. அத்துடன் அவர்களில் நிறையப் பேருக்கு, யதார்த்தமான அரசியல் நடைமுறை தெரியாது.

  எனவே, அரசியல் தலைமைகளால் ‘ஏட்டுச் சுரக்காய்’ போலவே கருதப்படுகின்றார்கள்.
  இதையெல்லாம் கடந்து, அரசியல் பற்றிய திறனாய்வு அறிவும், சமூகம் பற்றிய தூரநோக்குமுள்ள பல புத்திஜீவிகள் முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்றனர். இவர்களுக்குத் தனித்து அரசியல் செய்யப் போதுமான நிதி வசதி இல்லை.

  நிதி வசதி இருப்பவர்கள் நடைமுறை அரசியலின் வளைவு சுழிவுகளை அறியாதவர்களாக இருக்கின்றனர். இரண்டும் இல்லாதவர்கள், வேறு அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்படப் பின்வாங்குகின்றனர். அல்லது, அரசியல்வாதிகளால் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன.

  இருப்பினும், இவற்றையெல்லாம் கடந்து, உலக அரசியல், பொருளாதாரம் பற்றிய அறிவுள்ளவர்கள், முஸ்லிம் சமூக சிந்தனையுடன், பணியாற்றுவதற்கான களத்தை எதிர்பார்த்துள்ள பலர், முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்றார்கள்.

  எனவே, இவ்வாறானவர்களுக்கு கட்சித் தலைமைகளும் அரசியல்வாதிகளும் அரசியலுக்குள் உள்வாங்கி, வாய்ப்புகளை வழங்கி, அவர்களது ஆளுமையை, இந்தச் சமூகத்தின் விடிவுக்காகப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *