அதிகாரப் பகிர்வைப் பெறும் வாசலில் நிற்கும் எங்களை வெருட்டி – மிரட்டி எதையும் அடைய முடியாது! – கோட்டாவுக்கு சம்பந்தன் பகிரங்க எச்சரிக்கை

 

“அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமக்குச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அணியினர் கூறியுள்ளார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளுடன் வெல்வோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இயலும் என்றால் செய்து காட்டுங்கள். பெரும்பான்மை மக்களின் வாக்களால் வெல்ல முடியும் என்றால் வென்று காட்டுங்கள். எம்மை வெருட்டி – மிரட்டி எதையும் அடைய முடியாது. அவ்வாறு அடைவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கவேமாட்டோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதான போட்டி முக்கிய இரண்டு வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் நடைபெறுகின்றது. இவர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுவார். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் பங்குபெற்றுவதா? இல்லையா? என்பதே முதல் கேள்வி.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் பங்குகொள்ளவில்லை. பங்குபற்றாத காரணத்தால்தான் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய ஆட்சியின் கீழ் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் மக்கள் அனுபவித்த துயரங்கள் பற்றி நான் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அந்தக் கொடூர துயரங்கள் உங்களுக்குத் தெரியும். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் அந்தக் கொடூர நிலைமை ஏற்பட்டிருக்காது.

எனவே, மீண்டுமொரு கொடூரமான – பேராபத்தான நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த தேர்தலில் நாம் அனைவரும் வாக்களித்தே தீர வேண்டும். சஜித்தும் கோட்டாபயவும் ஆட்சியில் இருந்துள்ளார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்களின் சரித்திரக் கோவை எம்மிடம் இருக்கின்றது.

நடந்த அசம்பாவிதங்கள், மனித உரிமை மீறல்கள், அடிப்படை மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டவை, மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் எல்லாம் எமக்குத் தெரியும். இவற்றுக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள் என்றும் எமக்குத் தெரியும்.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகிய எமது இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். மாணவர்கள் ஊடகவியலளார்கள், மனித உரிமைக்காக உழைத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்விதமான ஓர் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த நாங்கள் விரும்புகின்றோமா? அவ்வாறான கொடூரமான நிலமையை நிறுத்துவதற்கு எங்களாலான பங்களிப்பைச் செய்யும் தேவை எமக்கு இல்லையா? கட்டாயம் எமக்கு இருக்கின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை துவேசவாதியாக நான் கருதவில்லை. அவரை நீண்டகாலமாக எனக்குத் தெரியும். அவரின் தேர்தல் அறிக்கை அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி, அந்த ஒற்றுமையின் அடிப்படையில் நாடு முன்னேற்றமடைந்து, சகல மக்களும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கருத்தைக் கூறியுள்ளது. இதுவே தனது திடமான நிலைப்பாடு என அவர் கூறியிருக்கின்றார். அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். அதன் மூலமாக மக்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவுமே கூறப்படவில்லை. ‘நாங்கள் செய்த தவறுகளை மன்னித்துக்கொள்ளுங்கள். இனியும் செய்யமாட்டோம்’ என்று கூட அவர் கூறவில்லை. ‘நடந்தது நடந்துவிட்டது. நடந்ததை மறந்துவிட்டு வாருங்கள்; ஒன்றாகப் பயணிப்போம்’ என்று மட்டுமே சொல்லியுள்ளார். எங்கு கூட்டிச் செல்லப் போகின்றார் என எமக்குத் தெரியவில்லை. கடந்த வரலாறுகள் மற்றும் பட்ட துன்பங்களைப் பார்த்தால் ஒரு முடிவை நாங்கள் எடுக்கலாம்.

சிவாஜியிடம் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்திடம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன். அவர் எனது கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொள்ளமாட்டார் என்றே நினைக்கின்றேன்.

எல்லோரும் ஒற்றுமையாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். யாருடைய வெற்றி எமக்குப் பாதகம் இல்லாமல் இருக்கும்? யாருடைய வெற்றி எமக்குச் சாதகமாக இருக்கும்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்த்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகள் சிலர் நாங்கள் கடும்போக்கைப் பின்பற்றாமல் சமாதானமாகப் பேசி பெற வேண்டியதைப் பெற்று வெல்லப் போகின்ற கோட்டாபயவை ஆதரியுங்கள் எனச் சொல்கின்றார்கள். நாங்கள் எவரிடமும் பிச்சை வாங்கத் தயாராக இல்லை. தமிழ் மக்கள் பிச்சை வாங்க வேண்டும் என்று தந்தை செல்வா சிந்திக்கவில்லை.

பெரும்பான்மை மக்களின் வெறுப்பை நாம் தேடக்கூடாது. அவர்களின் நட்பை, நம்பிக்கையைப் பெறவேண்டும். எமது பிரச்சினைக்குத் தீர்வு வரும். நாங்கள் நிதானமாகப் பக்குவமாகச் செயற்பட வேண்டும். உண்மையாகச் செயற்பட வேண்டும்.

எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, பிச்சை வாங்குவதற்காகப் போராடவில்லை. இதை எமது தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் பதவிகள் வேண்டுமாக இருந்தால், பெற்றுக்கொள்ளுங்கள். எமது மக்களை விற்று உரிமைகளைப் பெற வேண்டாம். மக்களை விற்று உரிமைகளைப் பெறுவதற்கு உங்களுக்கு உரித்து இல்லை.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் எது எமக்குச் சாதகமானது? எது எமக்குப் பாதகமானது? பிரதான வேட்பாளர்களின் பழைய நடத்தைகள் எப்படிப்பட்டன? அவர்களின் தேர்தல் அறிக்கைகள் எதனை உணர்த்துகின்றன? என்ற அடிப்படையில் தீர்க்கமான முடிவை நாம் எடுக்க வேண்டும்.

அந்த முடிவுக்கமைய எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று நூற்றுக்கு 95 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அவ்விதமாக எமது மக்கள் வாக்களித்தால் எமது இலட்சியம் நிறைவேற்றப்படும். இந்த தேர்தலும் எமது போராட்டப் பயணத்தின் மற்றொரு அடி.

இந்தத் தேர்தல் தொடர்பில் நாங்கள் சகல தரப்பினருடனும் பேசியிருக்கின்றோம். ஒரு தீர்வை நாங்கள் பெறுவோம். அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் எமது மக்கள் மதிப்புடன், பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு தீர்வைப் பெறுவோம். கணிசமான தூரம் பயணித்துள்ளோம். அதிகாரப் பகிர்வைப் பெறக்கூடிய வாசலில் நாங்கள் தற்போது நிற்கின்றோம். ஆகையால், நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக, ஒருமித்து நிற்க வேண்டும். நல்ல முடிவை எடுக்க வேண்டும்” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *