தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்! 5 கட்சிக் கூட்டணியாகவே வருவோம்!! – ரணிலின் தனி அழைப்புக்கு விக்கி இப்படி நேரடிப் பதில்; இன்னும் ஓரிரு நாட்களில் சந்திப்பு நடக்கும் சாத்தியம்

“தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்; ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம்.”

– இப்படிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு நேரடியாகப் பதில் கொடுத்திருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பில் இருந்து பேச்சுக்கு வருமாறு நேற்று சனிக்கிழமை விக்னேஸ்வரனுக்கு அழைப்புக் கிட்டியபோதே அவர் இவ்வாறு நேரடியாகப் பதிலளித்தார் என நம்பகரமாக அறியவந்தது.

“நான் தனித்துப் பேச வர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம்” என்று விக்னேஸ்வரன் கறாராகப் பதிலளித்தார் என்றும் தெரியவந்தது எனக் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இன்றைய (20.10.2019) பிரதான தலைப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

ஏனைய நான்கு கட்சிகளின் பிரதானிகளான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) ஆகியோருடன் உரையாடி அவர்களுக்கு ஏற்ப ஒழுங்குகளைச் செய்யும்படி விக்னேஸ்வரன் தெரிவித்த பதிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார் எனத் தெரிகின்றது.

நாளை திங்கட்கிழமை அல்லது அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதமர் ரணில் தரப்பிலிருந்து விக்னேஸ்வரனுக்குப் பதில் கிடைத்திருப்பதாக அறியவந்தது.

தற்போது கொழும்பில் தங்கியுள்ள விக்னேஸ்வரன், ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஏனைய தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னரே – பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ் திரும்புவார் எனத் தெரிகின்றது.

தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் – வரவேற்றாலும் வரவேற்கா விட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார் என அறியவந்தது – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *